நில ஆக்கிரமிப்பால் தகராறு.. மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்
மதுரை: மதுரை ஆதீனத்தின் மறைந்த மடாதிபதி அருணகிரி நாதரின் உடல் அடக்கம் செய்யும் இடத்தை மாற்றக் கோரி குத்தகைதாரர்கள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
Recommended Video
77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் உடல்நலக் குறைவால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டதை அடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
எனினும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அவரது உடல் இன்றைய தினம் அடக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருணகிரி நாதரின் உடல்
மறைந்த மதுரை ஆதினத்தின் 292வது ஆதினமான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதரின் உடலானது மதுரை முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மதுரை ஆதீனத்தின் சொந்த இடம்
இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான அந்த இடத்தை குத்தகைக்கு பெற்ற குபேந்திரன் என்பவர் ஆதீனத்தின் உடலை மாற்று இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என கூறியதால் ஆதீனம் தரப்பினருக்கும் - குத்தகைதாரர் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பாதுகாப்பு குவிப்பு
இதனையடுத்து கோவை காமாட்சிபுர ஆதீனம் , தருமபுர ஆதீன தம்புரான், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தற்போது ஆதீனத்தை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆதீனம் அடக்கம் செய்யப்படும் இடத்தில் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

குத்தகைதாரர் எதிர்ப்பு
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை காமாட்சிபுரி ஆதீனம் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் ஆதீனம் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு குத்தகைதாரர் எதிர்ப்பு தெரிவித்தார். எங்களது எதிர்ப்பை தொடர்ந்து காவல்துறை ஒத்துழைப்புடன் பணி நடைபெறுவதாகவும் , தமிழகம் முழுவதும் ஆதீனங்களின் சொத்துக்கள் இது போன்று ஆக்கிரமிக்கப்படுவதாகவும் , அரசு சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காது எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications