பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேசனில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் குறித்து ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் எந்த பயனும் இல்லை. பிரமாண பத்திரம் பெற்றுக்கொண்டு திரும்ப கொடுக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிடலாம் என மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
குற்ற வழக்குகளில் சிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். அப்படி பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை போலீசார் பல நாட்கள் போலீஸ் ஸ்டேசனிலேயே நிறுத்தி வைப்பார்கள்.. இதில் அந்த வாகனங்கள் ஒரு கட்டத்தில் துருப்பிடித்து பயனற்று வீணாகும். நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்னர் சில வாகனங்கள் ஏலம் விடப்படும். இந்நிலையில் குற்றவழக்குக்ளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் எந்த பயனும் இல்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது..

மதுரையை சேர்ந்த பாலகணேஷ், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி பாளையங்கோட்டை வன சரகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வனப்பகுதியில் கண்ணிவெடியை மறைத்து வைத்து புள்ளிமான்களை வேட்டையாடியதாக என் மீதும், என் நண்பர்கள் மீதும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது எனது காரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதேநேரம் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு பின்னர் என் வீட்டில் வைத்து என்னை போலீசார் கைது செய்தார்கள். பறிமுதல் செய்யப்பட்ட என்னுடைய காரை ஒப்படைக்கும்படி கேட்டபோது, வனத்துறையினர் மறுத்துவிட்டார்கள். எனவே வனத்துறையினர் பறிமுதல் செய்த காரை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்ந மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்களை போலீஸ் நிலையங்களில் வெகுநாட்கள் நிறுத்தி வைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் இதுபோன்று பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை தகுந்த உத்தரவாதம் மற்றும் பிரமாண பத்திரம் பெற்றுக்கொண்டு தேவைப்பட்டால் வாகனங்களை விசாரணை கோர்ட்டுகள் திரும்ப கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் 1 லட்சம் ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். இனி சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வாகனத்தை பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் வாகனத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்துவைத்தார்.












Click it and Unblock the Notifications