திருப்பரங்குன்றம் மலை தீபம்.. CISF வீரர்களை கூட்டிக் கொண்டு செல்ல மனுதாரருக்கு நீதிபதி உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவுப்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், தீபத்தூண் அருகே தீபம் ஏற்றுவதற்கு CISF வீரர்களை கூட்டிக் கொண்டு செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் காணொளிக்காட்சி வாயிலாக ஆஜராக உத்தரவிட்டார். இதற்கிடையே திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டதால் நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டு இருந்தது. மதுரை மாவட்டம் எழுமலையை சேர்ந்த ராம் ரவிக்குமார் என்பவர் இவ்விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தூண் உள்ளது.
இங்கு நீண்ட காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு மலை உச்சியில் உள்ள பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது ஆகம விதிமீறலாகும். எனவே கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இவருடன் மேலும் சிலரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.
பிள்ளையார் கோவிலில்
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நேரடியாக திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 1994ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பெயரில் மலை உச்சியில் உள்ள பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
தீபத்தூண் தற்போது மூடப்பட்டு உள்ளது என வாதிட்டார். இதன்பின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் இந்தாண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி உத்தரவு
கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சந்திரசேகர் மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கு பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மேல்முறையீடு மனு இன்று பிற்பல் விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் காணொளிக்காட்சி வாயிலாக ஆஜராக உத்தரவிட்டார்.
இதற்கிடையே திருப்பரங்குன்றம் கோவிலில் ஆண்டுதோறும் போல உச்சிபிள்ளையர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் தனது உத்தரவுக்கு மாறாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டதால், தீபத்தூண் அருகே தீபம் ஏற்றுவதற்கு CISF வீரர்களை கூட்டிக் கொண்டு செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications