Election Exclusive: மதுரையில் திருமங்கலம் தொகுதி முக்கியம்! ஆர்பி உதயகுமாருக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக
மதுரை: மதுரை திருமங்கலம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை வீழ்த்துவதற்கு திமுக மேலிடம் தீவிரம் காட்டி வருவது தெரிய வந்துள்ளது. அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் உள்ள கோஷ்டி பூசலை முடித்து, அந்த தொகுதியில் வெல்வதற்கான பணிகளையும் மேற்கொள்ள திமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுகவின் சீனியர் நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டமாக பயணித்து ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளனர். ஏற்கனவே தென் மாவட்டங்களில் கனிமொழி தலைமையிலான குழு ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டது. அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக சீனியர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றனர்.

மதுரை திமுக ஆலோசனை
குறிப்பாக கோஷ்டி பூசல் உள்ள மாவட்டங்களில் சிக்கலை சரி செய்ய முக்கிய நிர்வாகிகள் களமிறக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மதுரையில் நேற்று இரவு சில முக்கிய தொகுதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அதன்படி மதுரையில் மதுரை தெற்கு, மத்திய மத்திய தொகுதி, சோழவந்தான், மேலூர் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக பின்னடைவை சந்திப்பதாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி
மதுரை மத்திய தொகுதியின் எம்எல்ஏவாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வருகிறார். அமைச்சரின் தொகுதியில் பின்னடைவு என்ற தகவல், திமுக மேலிடத்தை கொந்தளிக்க செய்திருக்கிறது. இதனால் மதுரை மாவட்ட மாநகர் செயலாளர் தளபதி மூலமாக கவுன்சிலர்களுக்கு இடையிலான கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வந்து, இந்த தொகுதியில் வெல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தபப்ட்டுள்ளது.
திருமங்கலம் தொகுதிக்கு குறி
அதேபோல் திருமங்கலம் தொகுதியில் மீண்டும் ஆர்பி உதயகுமார் வெற்றிபெறக் கூடாது என்று திமுக தலைமை நேரடியாக கூறியுள்ளது. திருமங்கலம் தொகுதியின் வேட்பாளராக போட்டியிட உள்ள மணிமாறனும் இந்த ஆலோசனை கூட்டத்தில் இருந்திருக்கிறார். அப்போது மணிமாறன் தரப்பில் மைக்ரோ லெவலில் பணிகள் நடந்து வருவதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
செளராஷ்டிரா வாக்குகள்
மதுரை வடக்கு தொகுதி மற்றும் மதுரை தெற்கு தொகுதியின் நிலவரமும் சரியாக இல்லை என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக செளராஷ்டிரா மக்களின் வாக்குகள் பாஜக பக்கம் செல்வது ஏன், நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி பாஜக 2வது இடத்திற்கு வந்தது என்றும் கேள்வி திமுக மேலிடம் எழுப்பி இருக்கிறது. அது சட்டசபைத் தேர்தலின் போது மாறும் என்று திமுகவினர் உறுதி கொடுத்துள்ளனர்.
திமுகவின் திட்டம் என்ன?
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக மதுரையில் 5 தொகுதிகளில் வென்றது. இந்த தேர்தலில் கூடுதலாக 2 அல்லது 3 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தீபாவளி, பொங்கல், உதயநிதி பிறந்தநாள் ஆகியவற்றுக்காக பரிசுப் பொருட்களை திமுகவினர் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications