Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை - தூத்துக்குடி இடையே 2 சுங்கச்சாவடிகள் மீண்டும் செயல்பட தொடங்கின.. உச்ச நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை-தூத்துக்குடி இடையே 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக மதுரை - தூத்துக்குடி இடையே உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளும் இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. மாதம்தோறும் 11 கோடி ரூபாய் வசூலாகும் நிலையில், 30 லட்சம் ரூபாய் மட்டும் தான் பராமரிப்பு பணிக்காக செலவிடுகிறார்கள் என தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் முன்னதாக தடை விதித்திருந்தது.

மதுரை-தூத்துக்குடி இடையே சுமார் 135 கிலோமீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்த சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டிருந்தது. இந்த சாலையில் தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் மற்றும் மதுரை எலியார்பத்தி ஆகிய பகுதிகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

Tolls can be collected at 2 toll booths between Madurai and tuticorin after the Supreme Court order

இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் "மதுரை எலியார்பத்தி சுங்க சாவடி, தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய 2 சுங்க சாவடிகளிலும் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இங்கு கடந்த 2011 முதல் மத்திய அரசு அனுமதியுடன் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடியில் மத்திய அரசு நிர்ணயித்த தொகையை காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

11 கோடி வசூல்

மாதம்தோறும் 11 கோடி ரூபாய் வசூலாகும் நிலையில், 30 லட்சம் ரூபாய் மட்டும் தான் பராமரிப்பு பணிக்காக செலவிடுகிறார்கள். மதுரை-தூத்துக்குடி சாலையில் சுங்கச் கட்டண வசூல் செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் நெடுஞ்சாலையை பராமரிக்க ரூ.563.83 கோடி பணத்தை இதுவரை செலவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செலவு செய்யப்படவில்லை.

மரக்கன்றுகள் இல்லை

மதுரை - தூத்துக்குடி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தின்படி தேசிய நெடுஞ்சாலையைப் முறையாக பராமரிக்க வேண்டும். அதன்படி நெடுஞ்சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தின்படி சாலையின் ஓரங்களில் மரக்கன்றுகள் நடவே இல்லை. சாலை ஒப்பந்த அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் மற்றும் நெடுஞ்சாலை நடுவில் (சென்டர் மீடியன்) செடிகள் நட்டு பரமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். ஆனால், அதுபேன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 2023-ல் தனியார் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டது.

கட்டணம் வசூலுக்கு எதிராக வழக்கு

ஆனால் இந்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்படாமல் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு முறையான சாலைகள் அமைக்கப்படவில்லை.. கழிப்பறை வசதிகள் இல்லை, சாலையோரங்களில் மரம் நடுவதில்லை. எனவே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

தடை விதித்த உயர்நீதிமன்றம்

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியம் கிலீட் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த ஜூன் 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், ஒப்பந்தப்படி உரிய வகையில் சுங்க கட்டணம் வசூலிக்காமல், சாலைகளைப் பராமரிக்காமல் இருப்பது சட்ட விரோதம் என்றும், இயற்கை நீதிக்கு எதிரானது என்று விமர்சித்தனர். மேலும் தூத்துக்குடி - மதுரை இடையே சென்று வரக் கூடிய வாகனங்களுக்கு 2 சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மத்திய அரசு மேல்முறையீடு

இந்த தடை உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், எனவே ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

ஐகோர்ட் உத்தரவுக்கு தடை

வழக்கை தொடர்ந்த பாலகிருஷ்ணன் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, அனைத்து அம்சங்களையும் ஐகோர்ட் கருத்தில் கொண்டுள்ளது. உரிய பராமரிப்பு இல்லாமல் சுங்கக்கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளை என வாதிட்டார். இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம், மதுரை-தூத்துக்குடி இடையிலான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதித்த ஐகோர்ட் தடையை நிறுத்தி வைத்தது. மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க பாலகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டது.

லாரி டிரைவர்கள் போராட்டம்

முன்னதாக சுங்கச்சாவடி நிறுவனங்கள் தங்களுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை நகல் வரவில்லை எனக்கூறி கடந்த 4ம் தேதி அன்று தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலித்து வந்தது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி, ஜூன் 5ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதனையடுத்து அன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண வசூல் மதுரை தூத்துக்குடி இடையே நிறுத்தப்பட்டது.

சுங்க கட்டணம் வசூல்

ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் வருவதற்கு முன்பே சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு கிடைத்தவுடன், நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டணம் மீண்டும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மதுரை இடையே சாலை முறையாக பராமரிக்கப்படாத நிலையில், கட்டண வசூல் செய்ய, உச்ச நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கியிருப்பதை விமர்சிக்கும் பொதுமக்கள், அதற்கு ஏற்றபடி சாலையை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+