டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து! இன்று அரிட்டாபட்டிக்கு செல்கிறார் மத்திய அமைச்சர்
மதுரை: டங்ஸ்டன் சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மேலுரை ஒட்டியுள்ள அரிட்டாபட்டி கிராம மக்கள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தற்போது சுரங்க ஏலத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று அரிட்டாபட்டியில் மக்களை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி சந்திக்கிறார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக நடத்தப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலூர் பகுதி மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, தூத்துக்குடி பகுதியை சீரழித்த வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மட்டுமல்லாது போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர். இது குறித்து அரசியல் கட்சிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவிக்க தொடங்கின.
காரணம் அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பல்லுயிர் பாரம்பரிய மண்டலாகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன. இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது.
இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன. அரிட்டாப்பட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.
அதேநேரத்தில் மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியை இனி வரும் காலங்களிலும் இத்தகைய திட்டங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக அந்தப் பகுதியை மேலூர் பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு சுரங்க ஏலத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் ஸ்டாலின், "நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது. அப்படி நடந்தால் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என் ஆவேசமாக பேசியிருந்தார்.
தொடர் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் முயற்சிகள், மிக முக்கியமாக தமிழ்நாடு அரசின் தீர்மானம் போன்ற காரணங்களால் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து மதுரை மேலூரை அடுத்த வள்ளாலப்பட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாராட்டு விழா இன்று நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர், அரிட்டாபட்டிக்கு சென்று மக்களுடன் உரையாற்றுகிறார்.












Click it and Unblock the Notifications