நிரம்பும் வைகை அணை.. ஊதப்பட்ட அபாய சங்கு உஷார் மக்களே.. வைகை ஆற்றில் இறங்க வேண்டாம்.. எச்சரிக்கை
மதுரை: கனமழை காரணமாக வைகை அணை நிரம்பி வருவதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, மூல வைகை, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மூல வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பி வருவதால் அங்கிருந்து கூடுதல் தண்ணீரும் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு இரண்டு கட்டங்களாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, ஆற்றை கடக்கவோ, இறங்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில், பொதுவாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடி வந்தவுடன், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே உபரிநீராக திறந்து விடப்படுவது வழக்கம். இன்றைய தினம் வைகை அணை 69 அடியை எட்டியுள்ளது.
அணை நிரம்பி வருவதை அடுத்து அணையின் மேல்புறத்தில் உள்ள அபாய சங்கு 3 முறை ஒலிக்கப்பட்டது. 7 பிரதான மதகுகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுகிறது. வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 32வது முறையாக வைகை அணை நிரம்பியுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களும், விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications