கூட்டாளி கொலை வழக்கு.. பிரபல ரவுடி "நடமாடும் நகைக் கடை" வரிச்சியூர் செல்வம் மதுரையில் கைது
மதுரை: கூட்டாளி கொலை வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
மதுரையை சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது கூட்டாளியாக இருந்தவர் செந்தில். இவருக்கும் வரிச்சியூர் செல்வத்திற்கும் இடையே தகராறு எழுந்ததாக தெரிகிறது.
இதனால் செந்தில் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குடியேறியுள்ளார். இந்த நிலையில் வரிச்சியூர் செல்வம் அழைப்பதாக செந்திலின் மனைவி மகாலட்சுமி போன் வந்துள்ளது.
இதை தனது கணவரிடம் மகாலட்சுமி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து செந்தில் வரிச்சியூர் செல்வத்தை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவே இல்லை. அதன் பின் செந்திலின் உடல்தான் கிடைத்தது. இந்த கொலை வழக்கின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் வரிச்சியூர் செல்வத்தை இன்று கைது செய்தனர்.

சாத்தூர் நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வத்தை போலீஸார் ஆஜர்படுத்துவர் என தெரிகிறது. வரிச்சியூர் செல்வத்தின் மீது ஆள் கடத்தல் வழக்கு, கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆரம்ப காலத்தில் ரவுடியாக வலம் வந்தாலும் ஒரு கட்டத்தில் இவர் மீது என்கவுன்ட்டர் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில் திருந்தி வாழ்வதாக போலீஸில் உறுதி அளித்தார்.
இந்த நிலையில் அவர் உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொணடு பொது இடங்களில் வருவார். இதன் மூலம் இவர் பிரபலமாகினார். கழுத்தில் அணிந்திருக்கும் சங்கில் மட்டும் 128 சவரன் என சொல்லப்படுகிறது. கொரோனா காலத்தில் தங்கத்தில் மாஸ்க் அணிந்தார். இவர் எங்கு சென்றாலும் இவருடன் செல்பி எடுத்து வருகிறார்கள்.
இவர் தான் அணிந்திருக்கும் நகைகளுக்கு முறையாக வருமான வரி செலுத்தி வருவதாக சொல்கிறார். இவருடைய சொத்து மதிப்பும் பல கோடி இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வரிச்சியூர் செல்வம் பேட்டி அளிக்கையில், நான் ரவுடி இல்லை, நான் யாரிடமாவது ரவுடித்தனம் செய்து பணம் பெற்றதை பார்த்துள்ளீர்களா?
எதற்காக என்னை ரவுடி என கூறுகிறீர்கள். என்னிடம் கத்தியை காட்டி யாராவது மிரட்டி நகைகளை கேட்டால் கொடுத்துவிடுவேன் என்றார். மேலும் காயத்ரி ரகுராம் , வரிச்சியூர் செல்வத்துடன் எடுத்த புகைப்படத்தை திருச்சி சூர்யா சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இதனால் கோபமடைந்த வரிச்சியூர் செல்வம், திருச்சி சூர்யாவிடம் போன் செய்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.
அப்போது சூர்யா தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக வரிச்சியூர் தெரிவித்தார். ஆனால் உடனே செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சூர்யா, நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்றார். மேலும் 4 செயின், 40 கார் வைத்திருந்தால் பெரியாளா என கேட்டிருந்தார். இதற்கு செல்வம் கூறுகையில், நான் தமிழகத்தில் பார்க்காத ஜெயில்களே இல்லை. இந்தியாவில் 4 மாநில ஜெயில்களில் இருந்துள்ளேன் என தெரிவித்திருந்தார். இவர் வரிச்சியூரான் வகையறா என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications