வேலூர் இப்ராஹிமுக்கு கோபம்.. டக்னு செருப்பை எடுத்து.. மதுரை திருப்பரங்குன்றத்தில் ஒரே பரபரப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இப்ராஹிமை கைது செய்ததற்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில், சிக்கந்தர் தர்காவுக்கு சென்ற இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலியிடுதலை தடுத்து அதிகாரிகள் நிறுத்தியதால் வாதம் உண்டாகியது. இதுதொடர்பாக இந்து - இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அசைவ உணவு: இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு சாப்பிட்டதால் சர்ச்சை எழுந்தது. இதற்கு ஏராளமானோர் கடும் கண்டனங்களை நவாஸ்கனிக்கு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு இப்ராஹிம் சென்று இருந்தார். அப்போது திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பள்ளிவாசலில் வழிபாடு செய்வதற்காகவும் செல்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதையறிந்த காவல்துறை அதிகாரிகள், ஜெய்ஹிந்த்புரத்தில் விடுதியில் தங்கியிருந்த இப்ராஹிமை மலைக்கு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்குவாதம்: உடனே பாஜகவினர் தங்களை மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.. அப்போது, வேலூர் இப்ராஹிம், ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனியின் போட்டோ மீது காலணியால் அடித்து தன்னுடைய எதிர்ப்பை பதிவுசெய்தார். இதையடுத்து, போலீஸார் வேலூர் இப்ராஹீமை கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு அங்கிருந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தும், இப்ராஹிமை விடுவிக்கக்கோரியும், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய வாசலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கலைந்துபோகச் செய்தனர்.. இறுதியில் பாஜகவைச் சேர்ந்த 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதனால் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வலியுறுத்தல்: முன்னதாக, வேலூர் இப்ராஹிம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், திருக்கோயில் மலையில் அசைவ உணவு உட்கொண்டதை, நவாஸ் கனி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதன் ஒரே நோக்கம், இந்து சமய மக்களைப் புண்படுத்துவது மட்டுமே. கோயில் மலையில் அசைவ உணவு உண்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று கூறியிருக்கும் நவாஸ் கனி, அவரது வாயாலேயே உண்மையை ஒப்புக்கொண்டதால், உடனடியாக பதவி விலக வேண்டும். முருகப்பெருமான் திருக்கோயிலை அசுத்தப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்" என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications