எங்கப்பா பூத் கமிட்டி.. தென் மாவட்டங்களில் தவெகவின் ஒரிஜினல் கட்டமைப்பு இவ்வளவுதானா?
மதுரை: சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், தென் மாவட்டங்களின் பல்வேறு தொகுதிகளிலும் பூத் தவெகவுக்கு ஏஜெண்ட் கூட இல்லாதது தெரிய வந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் பூத் கமிட்டி கூட போட முடியாத சூழலில் தவெக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் சூழலில், 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கே ஏராளமானோர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

முதல் நபராக நடிகர் அஜித் குமார் வாக்களித்தார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் கருணாஸ், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலரும் வாக்களித்துவிட்டனர்.
அதேபோல் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகாலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நிற்கின்றனர். இன்னொரு பக்கம் திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தென் மாவட்டத்தில் தவெக சார்பாக பல்வேறு வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி நிர்வாகிகளே இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
குறிப்பாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் இல்லை. மதுரை தெற்கு, மதுரை கிழக்கு, மேலூர் உள்ளிட்ட தொகுதிகளில் பெயரளவில் கூட பூத் கமிட்டி அமைக்கப்படவில்லை. இன்னொரு பக்கம் சிவகாசி, விருதுநகர், திருச்சுழி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் போதுமான அளவில் பூத் கமிட்டி நிர்வாகிகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தவெகவின் கட்டமைப்பு குறித்த கேள்விகள் எழுந்தன. அந்த கட்டமைப்பு தேர்தல் நாளான இன்று வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. நாதக, தேமுதிக, சசிகலா தரப்பு கூட சிறப்பாக பூத் கமிட்டி அமைத்திருக்கின்றனர். ஆனால் தவெக 233 தொகுதிகளில் முறையாக பூத் கமிட்டியே அமைக்காதது தெரிய வந்துள்ளது.
திமுக தரப்பில் மண்டல அளவிலான பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தப்பட்டது. வழக்கம் போல் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பூத் கமிட்டி கட்டமைப்பில் வலுவாக முன் நிற்கின்றன. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் சில தொகுதிகளில் பூத் கமிட்டியை கூட முறையாக அமைக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications