எக்கச்சக்க கெடுபிடி.. தவெக விஜய்க்கு எகிறும் பிரஷர்! மாநாட்டு தேதி மாற்றத்துக்கு இது தான் காரணமா?
மதுரை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை ஆகஸ்ட் 25ஆம் தேதி சென்டிமென்டாக நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தேதி மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதாலேயே குறிப்பிட்ட நாளில் மாநாட்டை நடத்தவிடவில்லை என அவரது கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை களத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி பிரேமலதா விஜயகாந்த் வரை மக்களை தேடி சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தமிழக அரசியலில் புதிய வரவான விஜயும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அதிகாரப்பூர்வமாக இது அவரது முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு இருந்தாலும், முதல் முறையாக கட்சியின் பெயரை தாங்கி வேட்பாளர்கள் களமிறங்க இருக்கின்றனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பது விஜயின் திட்டம். இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது மதுரையை.. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஜயகாந்த் சென்டிமென்டை மனதில் கொண்டே விஜய் மதுரையை தேர்ந்தெடுத்திருந்தார்.
குறிப்பாக, ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநாடு நடைபெறும் என கடந்த மாதமே விஜய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்றும் விஜய் அறிவித்ததற்கு அன்றைய தினம் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ஏற்கனவே அரங்கேறி இருந்ததுதான் காரணம். அன்றைய தினம் தான் நடிகர் விஜய்யின் திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு ஆரம்ப காலகட்டத்தில் உறுதுணையாக இருந்த விஜயகாந்தின் பிறந்த நாளும் கூட..
விஜயகாந்தின் சொந்த ஊரில், விஜயகாந்தின் பிறந்தநாளில் மாநாடு நடத்தப் போவதை நினைத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். மேலும் தேமுதிக ஆதரவு வாக்குகள் கூட விஜய்க்கு கிடைக்கும் என பேசப்பட்டது. இந்த நிலையில் அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாக அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்திருக்கிறார். 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அதற்கு முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதால் மாநாட்டை முன்னதாகவே நடத்துவதாக விஜய் அறிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில் விஜய்க்கு தொடர்ந்து மறைமுக நெருக்கடிகள் தரப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி விட வேண்டும் என பல்வேறு கட்சிகள் நினைக்கின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதற்கு முன்னதாக மதுரை, திருச்சி, சேலம் என பல இடங்களில் இடம் பார்த்து அமையவில்லை. அதற்கு தமிழகத்தில் பிரதான கட்சி ஒன்றின் மறைமுக நெருக்கடியே காரணம்.
நீண்ட இழுபறிகளுக்கு பிறகு ஒரு வழியாக மாநாடு நடந்தேறியது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் செல்வாக்கை நிரூபிக்க விஜய் தேர்ந்தெடுத்தது மதுரையை.. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே காவல்துறை பல்வேறு கெடுபிடிகளை விதித்தது. 24 கட்டுப்பாடுகளையும் விதித்தது. இதற்கு முன்னர் மதுரையில் பல மாநாடுகள் நடந்திருந்தாலும் தமிழக கட்சி கழகத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் அதிகம். தற்போது தேதியும் மாறிவிட்டது. இருந்த போதும் வழக்கத்தை விட இந்த முறை மாநாட்டை மிக உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் நடத்திக் காட்டுவோம்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications