'2031இல் ஆட்சி நமதே.. நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு..' தெறிக்கவிடும் மதுரை விஜய் ஃபேன்ஸ்
மதுரை: '2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு - நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு' என்ற வாசகத்துடன் நடிகர் விஜய்யை முதல்வராகச் சித்தரித்து மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் முதல்கட்ட வாக்குப்பதிவில் 74.37% வாக்குகளும் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 78.47% வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதில் பதிவான வாக்குகள் கடந்த 12ஆம் தேதி எண்ணப்பட்டன,

ஊரக உள்ளாட்சித் தேர்தல்
இதில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே கைப்பற்றின. மாவட்ட கவுன்சிலராக தேர்தலில் மொத்தமுள்ள 138 இடங்களில் திமுக கூட்டணி 138 தன்வசப்படுத்தியது. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் 1021 இடங்களில் திமுக வென்றது. வெறும் 6 மாதங்களுக்கு முன் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது . அதிமுக மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் அனைத்தும் மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கம்
அதேநேரம் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முதலாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் குறிப்பிடத்தகுந்த அளவில் வேட்பாளர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஆதரவுடன் கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டியின்றி 13 பேர், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர்.

மதுரையில் போஸ்டர்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெருவாரியான வெற்றியைப் பெற முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், இதுவரை அரசியலில் களம் காணாத நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது அரசியல் கட்சிகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த வெற்றியைத் தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் உள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் இறுதி தீர்வு
அந்த போஸ்டரில் நடிகர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பது போலச் சித்தரித்து, '2031ல் ஜோசப் விஜய் எனும் நான் உண்மையான நம்பிக்கையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என உறுதி கூறுகிறேன்' எனப் பிரமாணம் எடுக்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 2021 உள்ளாட்சியில் நல்ல தேர்வு- நீங்கள் தான் தமிழகத்தின் இறுதி தீர்வு என ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications