"இரட்டை இலை சின்னம்!" எடப்பாடிக்கு மெகா சிக்கல்? நமட்டு சிரிப்புடன் ஓபிஎஸ் பரபர.. என்ன பாருங்க
மதுரை: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், அதிமுக இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நாட்டில் இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான நடவடிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும்.

அதேநேரம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக, அதிமுக கூட்டணிக்கு இடையே தான் நேரடி போட்டி இருக்கும். இந்த இரு கட்சிகளும் கூட கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இதில் அதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் பாஜக உடன் கூட்டணி இல்லை எனக் கூறிவிட்டார்கள்.
ஓபிஎஸ்: அதேநேரம் ஓபிஎஸ் தரப்பு தாங்கள் இன்னும் பாஜக கூட்டணியில் தான் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் தொடர்பாகக் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு படுதோல்வி அடையப் போகிறார். தேர்தலுக்கு முன்பு என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. மக்கள் தீர்ப்பு என்ன என்பது தேர்தலில் தெரியும்.
அதிமுக கொடி, சின்னத்தை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு இருக்கிறது. தொண்டர்கள் பயன்படுத்துக கூடாது என்ற உத்தரவு எங்கும் இல்லை. எங்கள் தொண்டர்களின் வேகமும் உணர்வும் எப்படி இருக்கிறது என்பது பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.
அதிமுக ரத்தம்: எனக்குள் ஓடுவது அதிமுக ரத்தம்.. இந்த ரத்தத்தை மாற்றத் தீர்ப்பு அளிக்க முடியுமா.. பாஜகவின் என்டிஏ கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். தனித்து நிற்கும் ஐடியாவில் இல்லை. கூட்டணியாகக் களமிறங்கவே விரும்புகிறோம். நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்குச் சிறப்பான ஒரு ஆட்சியைக் கொடுத்துள்ளார்கள். மீண்டும் அவரே நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்பதற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம்.
இந்த நாட்டின் பெருமையைக் கடந்த 10 ஆண்டுகளில் உயர்த்தியவர் மோடி.. உலகில் இருக்கும் வளர்ந்த நாடுகள் கூட மோடியின் நிர்வாகத் திறனைப் பாராட்டுகிறது. இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது. எனவே, பாஜகவின் மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்றார்.
நமட்டு சிரிப்பு: தொடர்ந்து இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு அவர், "இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரை அது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது. அது தற்காலிக தீர்ப்பு மட்டுமே. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் இருப்பதால் எங்களால் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோர முடியும். அந்த உரிமையின் அடிப்படையில் கேட்போம். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத் தான் தருவார்கள்.
கூட்டணி தொடர்பாக எங்களுடன் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும். கூட்டணி இறுதியான உடன் இது தொடர்பாக அறிவிப்போம். மேலும், இந்த லோக்சபா தேர்தலில் எங்களுக்குத் தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதால் தனி சின்னம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று நமட்டு சிரிப்புடன் அவர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications