நூலகத்தின் மீது ஆர்.பி.உதயகுமாருக்கு இவ்வளவு அலர்ஜி ஏன்? சு.வெங்கடேசன் எம்.பி. சுளீர் கேள்வி!
மதுரை: நூலகம் என்பது அறிவுத்திருக்கோயில் என்றும் அதன் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு இவ்வளவு அலர்ஜி ஏன் எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், புத்தகம் கேட்கிற பிள்ளைகள் எல்லோர் வீட்டிலும் இருக்கிறார்கள் என்றும் அதிமுகவினர் வீட்டில் மட்டும் இல்லையா எனவும் உதயகுமாருக்கு சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் தமிழ்நாட்டின் அறிவுத் திருக்கோயிலாக மதுரையில் கட்டப்பட்டுள்ள ''கலைஞர்'' நூற்றாண்டு நூலகத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், மற்றும் அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
விசாலமான வாகன நிறுத்துமிடம், பூங்கா, முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதி, என ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் லெவலில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.
'இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சூழலில் மதுரையில் நூலகம் வேண்டும் என்று மாணவர்களோ, இளைஞர்களோ யாரும் கேட்கவில்லை என சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் சு.வெங்கடேசன் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications