EMI Pending: "இடிச்சிடாதீங்கய்யா, இஎம்ஐ கூட முடியலை" மங்களூர் காரில் ஸ்டிக்கர்! இணையத்தில் கலகல!
மங்களூர்: மங்களூரில் ஒரு காரில் ஒட்டப்பட்டிருந்த Keep distance, EMI pending என்ற ஸ்டிக்கர், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. படித்ததும் சிரிப்பை வரவழைக்கக் கூடிய இந்த வாசகம் அவ்வழியாக சென்ற பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் @bearys_in_dubai என்ற பெயரில் ஒருவர் பகிர்ந்த இந்த வீடியோ, 5.4 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 3 லட்சத்திற்கும் மேலான லைக்குகளையும் பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூரிவில் உள்ள சர்க்யூட் ஹவுஸ் சாலையில் மாருதி சுசுகி ஆல்டோ கார் ஒன்று செல்வதைப் போல் அந்த வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளது. காரின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த "விலகி இருங்கள், இ.எம்.ஐ பாக்கி உள்ளது (Keep distance, EMI pending)" என்ற ஸ்டிக்கர்தான் இந்த வீடியோவின் முக்கிய அம்சம்.
பொதுவாக வாகனங்கள் விபத்தில்லாமல் பயணிக்க ஏதுவாக சிலர் தங்கள் வாகனங்களில் "பின்னால் வா முத்தமிடாதே", "கரணம் தப்பினால் மரணம்", "Keep Distance", "உனக்காக வீட்டில் உன் குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்" உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். பெயின்டுகளாலும் எழுதப்பட்டிருக்கும்.
இந்த வாகனத்தின் பின்னால் செல்லும் வாகனங்கள், இந்த வாசகங்களை படித்துவிட்டு விழிப்புணர்வு ஏற்பட்டு ஜாக்கிரதையாக சென்றவர்களும் இருக்கிறார்கள்.
அது போல் மங்களூர் காரில் இருந்த ஸ்டிக்கர், பொதுவான சாலைப் பாதுகாப்பு எச்சரிக்கையுடன், மாதாந்திரத் தவணை (EMI) செலுத்த வேண்டிய நிதி நெருக்கடியையும் சேர்த்து, ஒரு நகைச்சுவையான புதுமையைக் கொண்டு வந்துள்ளது.
இதற்கு நெட்டிசன்கள் பலர் வேடிக்கையான பதில்களை அளித்துள்ளனர். அன்றாட வாழ்வில் மக்கள் சந்திக்கும் நிதிச் சிக்கல்களை இந்த ஸ்டிக்கர் பிரதிபலித்ததாகப் பலர் கருத்து தெரிவித்தனர்.
"இது ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும் சோகமாகவும் இருக்கிறது" என்று ஒரு பயனர் எழுத, மற்றொருவரோ, "சிறுவர்கள் இதைப் பார்த்தால் சிரிப்பார்கள், ஆனால் ஆண்கள் இதன் வலியை உணருவார்கள்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இன்னொருவர், "வங்கிக்கு விசுவாசமானவர்" என்று கேலியாகக் குறிப்பிட, வேறொருவர், "இந்தியா புதியவர்களுக்கு ஏற்றதல்ல" என்று பதிவிட்டார். மேலும், பலரும் இதை ஒரு "சிறந்த வாசகமாக"ப் பாராட்டினர். அத்துடன், இந்த பதிவின் கமெண்ட் பகுதியைச் சிரிக்கும் மற்றும் அழும் எமோஜிக்களால் நிரப்பினர்.

இணையத்தின் கவனத்தை ஈர்த்த கார் ஸ்டிக்கர் இது முதல் முறை அல்ல. முன்னதாக, தமிழகத்தில் இருந்து வெளிவந்த ஒரு வீடியோவும் இதேபோல பெரும் வரவேற்பைப் பெற்றது.
@rajeshtravels3110 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், ஒரு வீட்டின் பார்க்கிங் பகுதியில், வெள்ளைத் நிற மாருதி சுசுகி இக்னிஸ் கார் ஒன்று மெதுவாக வந்து நின்றது.
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது என்னவென்றால், அந்த காரில் ஒட்டப்பட்டிருந்த "எனக்கு இன்னொரு கார் பி.எம்.டபிள்யூ." (My other car is BMW) என்ற ஸ்டிக்கர்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, கேமரா திரும்பியபோது, அதே வீட்டிற்குள் உண்மையாகவே ஒரு பி.எம்.டபிள்யூ. கார் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த வேடிக்கையான ஸ்டிக்கர், ஒரு எதிர்பாராத உண்மையான பெருமையாக மாறி, இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications