இன்று தேர்தல்.. மகாராஷ்டிரா எம்எல்ஏக்களுக்கு வாழ்வு.. நட்சத்திர ஓட்டலில் பாதுகாக்கும் கட்சிகள்
மும்பை: மகாராஷ்டிராவில் காலியாக இருக்கும் 11 சட்டமேலவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறும் நிலையில், எம்.எல்.ஏ-க்கள் அணி மாறிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது எம்.எல்.ஏ-க்களை தனித்தனியாக நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்தலோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 48 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்றதால் உற்சாகத்தில் உள்ள எதிர்க்கட்சி கூட்டணியான மஹா விகாஸ் அணி ( இந்தியா கூட்டணி) மூன்று வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அவர்களால் இரண்டு வேட்பாளர்களை தான் நிறுத்த முடியும் என்கிற நிலையில் 3 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்தில் தற்போது 274 உறுப்பினர்கள். இதன்படி பார்த்தால் ஒரு எம்எல்சியை தேர்வு செய்ய 23 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை. இதில் பாஜக, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவு மற்றும் என்சிபியின் அஜித் பவார் பிரிவு ஆகியவற்றைக் கொண்ட ஆளும் மகாயுதி -கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் ஆதரவு என 201 எம்எல்ஏக்கள் ஆதரவை கொண்டுள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி ஒன்பது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இந்தியா கூட்டணியின் கீழ் இருக்கும் மகா விகாஸ் அணியில், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத்பவார்) ஆகிய கட்சிகள் உள்ளளன. இவர்களுக்கு 67 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. எனினும் மூன்று வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. ஒட்டுமொத்தமாக 11 எம்எல்சி இடங்களுக்கு 12 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒரு சுயேச்சை உட்பட ஆறு எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகிக்கிறார்கள். இவர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்களின் வேட்பாளர்தான் எம்எல்எசியாக தேர்வாக முடியும்.
இத்தேர்தலில் அஜித்பவார் தலைமையிலான அணியில் உள்ள எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கும் அபாயம் உள்ளதாம். சிலர் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரும் மனநிலையில் இருக்கிறார்களாம், அஜித் பவார் கட்சியில் இப்போது 40 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். ஆனால் அவர் 2 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 23 வாக்குகள் தேவை. அதனால் இரு வேட்பாளர்களும் வெற்றி பெற இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற அஜித் பவார் பெற வேண்டும்.
சிவசேனா அணிகளை பொறுத்தவரை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஒரு வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ஆனால் அந்த கட்சிக்கு 15 எம்.எல்.ஏ-க்கள் தான் இருக்கிறார்கள். அக்கட்சிக்கு இன்னும் 8எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாகும். அந்த கட்சியுமே மற்றொரு சிவசேனா எம்எல்ஏக்கள் அணி மாறி வாக்காளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வேட்பாளரை நிறுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 37 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் ஒரு வேட்பாளரை மட்டும் நிறுத்தி இருக்கிறது. ஒரு வேட்பாளருக்கு 25 எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். எஞ்சிய 10 பேர் உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க உள்ர்கள். சரத் பவாரின் என்சிபி கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. அதேநேரம் அவர் சுயேச்சை வேட்பாளர் ஜெயந்த் பாட்டீலுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
சரத் பவார் கட்சிக்கு 14 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும். ஜெயந்த் பாட்டீல் வெற்றி பெற மேலும் 9 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் உபரியாக இருக்கும் இரு எம்.எல்.ஏ-க்கள் ஜெயந்த் பாட்டீலுக்கு வாக்களிக்க உள்ளார்கள். இது தவிர சமாஜ்வாடி மற்றும் எம்.ஐ.எம் கட்சிகளுக்கு தலா இரு எம்எல்ஏக்களும் ஜெயந்த் பாட்டீலுக்கு ஆதரவு அளிக்க உள்ளார்களாம்.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு 39 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால் ஷிண்டேயும் இரு வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறார். இவர்கள் வெற்றி பெற இன்னமும் கூடுதலான எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாகும். பாஜகவை பொறுத்தவரை 103 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. 5 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. எல்லா கூட்டணியுமே மற்ற கட்சி வேட்பாளர்கள் மாற்றி வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
இந்த சூழலில் தேர்தலுக்கு முன்பு எம்எல்ஏக்கள்அணி மாறிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது எம்எல்ஏக்களை தனித்தனியாக நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்தள்ளார்கள். காங்கிரஸ் எஎம்எல்ஏக்களை மாநில தலைவர் நானா பட்டோலே இரவு விருந்து கொடுத்து தனியாக நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துள்ளார். அஜித் பவாரும் தனது கட்சி எம்எல்ஏக்களை மத்திய மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து கவனித்து வருகிறார்.
உத்தவ் தாக்கரே தனது கட்சி எம்எல்ஏக்களை மத்திய மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிறப்பு விருந்து கொடுத்து தங்க வைத்தார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்கள் பாந்த்ராவில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க எம்எல்ஏக்கள் மும்பை கஃப்பரேடு பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இன்று நடைபெறும் தேர்தலில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து வாக்களிக்க வைக்கப்படுகிறார்கள். கட்சி மாறி வாக்களிப்பார்களோ என்று அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்..












Click it and Unblock the Notifications