கொஞ்ச நேரத்தில் கல்யாணம்.. மண்டபத்தில் இருந்த பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று.. கொடூர கொலை! பகீர்
மும்மை: மகாராஷ்டிராவில் திருமணத்திற்கு சில மணி நேரமே இருந்த நிலையில், மணப்பெண் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. காதல் விவகாரங்களைக் காதலை ஏற்காத பெண்கள் மீது ஆண்கள் அத்துமீறித் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
மறுபுறம் காதல் ஏற்றுத் திருமணத்திற்குத் தயாரானாலும், அவர்களையும் பெற்றோர்கள் ஆனவ கொலை செய்யும் கொடூரமும் இந்தியாவில் அரங்கேறுகிறது. அப்படியொரு கொடூர சம்பவம் தான் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் 17 வயது சிறுமியை அவரது தந்தையும் மாமாவும் அடித்தே கொலை செய்துள்ளனர். மேலும், ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக அந்த 17 வயது சிறுமியின் உடலையும் அப்படியே எரித்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஜல்னா மாவட்டம் பிர்பிம்பல்கான் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி தருவதாகவே உள்ளது.

17 வயது சிறுமி
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்த 17 வயது மைனர் பெண் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருப்பினும், இவர்கள் காதலைப் பெண்ணின் பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கடந்த வாரம் யாரிடமும் சொல்லாமல் அந்தப் பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இருப்பினும், சில நாட்களில் அந்த சிறுமி தனது காதலனுடன் இருக்கும் இடத்தை அவர்களின் பெற்றோர் கண்டுபிடித்துவிட்டனர்.

திருமண ஏற்பாடு
பெண்ணை வீட்டிற்கு வந்துவிடும்படி கெஞ்சிய தந்தை, சரியான நேரத்தில் அனைவருக்கும் முன்னிலையில் அருகேவுள்ள கோயிலில் திருமணம் செய்து வைப்பதாகச் சத்தியம் செய்துள்ளார். அப்பா சொல்வதை நம்பி அந்தச் சிறுமியும் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து அருகேயுள்ள கோயிலில் சில உறவினர்களை மட்டும் அழைத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடக்க இருந்தது. அன்று மண்டபத்தில் திருமணத்திற்காக உறவினர்களும் வந்துவிட்டனர்.

கொடூர தாக்குதல்
மண்டபத்தில் இரு வீட்டாரும் உறவினர்களும் கூடியிருந்த நிலையில், திடீரென இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நிலத்தை வரதட்சணையாகக் கொடுப்பது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திருமணத்தை அவர்கள் நிறுத்திவிட்டனர். இதனால், தங்கள் குடும்பத்திற்கே பெரிய அவமானம் என்று அந்தச் சிறுமியின் தந்தையும் மாமாவும் நினைத்துள்ளனர். அந்த சிறுமியை மண்டபத்தில் இருந்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

கொடூர கொலை
தனது சொந்த மகள் என்று கூட பார்க்காமல் தந்தை அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளார் மேலும், திருமணம் கடைசி நேரத்தில் நின்றது தங்களுக்கு அவமானம் என்று நினைத்த அவர்கள், சிறுமியின் கழுத்தை மரத்தில் கட்டி தூக்குப் போட வைத்துள்ளனர். இதையடுத்து எங்கு போலீசாரிடம் மாட்டிவிடுவோமோ எனப் பயந்த அவர்கள், சிறுமியின் உடலை உடனடியாக யாருக்கும் தெரியாமல் எரித்துள்ளனர். திடீரென தனது காதலி மாயமானதால் சந்தேகமடைந்த அவரது காதலர் அளித்த புகாரில் தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications