மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த பிரபல நடிகையின் தந்தை.. நடந்தது என்ன?
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மலைகாவின் தந்தை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கி நடிகர் ஷாரூக்கான் மற்றும் நடிகை மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டானது உயிரே திரைப்படம். இந்தப் படத்தில் வரும் தக்க தையா தையா பாடலில் நடனமாடி புகழ்பெற்றவர்தான் நடிகை மலைகா அரோரா. இவர் ஏராளமான குத்துப் பாடல்கள் மற்றும் கவர்ச்சிப் பாடல்களில் நடனமாடியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

மும்பை, பாந்த்ராவில் வசித்து வருகிறார் மலைகா அரோரா. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவரது தந்தை அனில் அரோரா கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அனில் அரோரா தனது மகள் மலைகாவின் வீட்டில் தான் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலையில் மலைகா அரோரா வீட்டில் இல்லாத நேரத்தில், அனில் அரோரா வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மலைகா அரோராவின் வீட்டிற்கு விரைந்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மலைகா அரோராவின் அப்பா மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக போலீஸார் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
அனில் அரோரா உயிரிழந்துள்ள நிலையில், அவரது வீட்டில் எந்தவொரு தற்கொலை கடிதமும் கிடைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அனில் அரோராவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படடுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக அனில் அரோரா அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மலைகா அரோரா புனே சென்றிருந்த நிலையில் தகவலறிந்தவுடன் மும்பைக்கு திரும்பியுள்ளார். அதேபோல, மலைகாவின் உறவினர்கள் மற்றும் மலைகா அரோராவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கான், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் அவரது வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மலைகா அரோராவுக்கு 11 வயது இருக்கும்போதே அவரது பெற்றோர் இருவரும் பிரிந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து, மும்பையில் செம்பூர் பகுதிக்குச் சென்று மலைகா மற்றும் அவரது சகோதரியை மிகவும் கஷ்டப்பட்டு அவரது தாய் வளர்த்துள்ளார். அதன் பிறகு, பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைத்து நடிக்கத் தொடங்கியுள்ளார்.
மலைகா அரோரா, பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து 19 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். அதைத்தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். மலைகா அரோராவும், நடிகர் அர்ஜூன் கபூரும் காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர்கள் இருவரும் சேர்ந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications