ரூ.1,40,00,00,00,000 போச்சு.. ஒரே நாளில் இப்படி ஆகிடுச்சே.. கதறும் முதலீட்டாளர்கள்.. என்ன நடந்தது!
மும்பை: அதானி குழுமத்தின் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் இன்று கடுமையாகச் சரிந்தது. பல்வேறு காரணங்களால் அதானி குழு பங்குகள் சரிந்த நிலையில், இன்று ஒரே நாளில் அவர்களின் சந்தை மூலதனம் ₹1.4 லட்சம் கோடி சரிந்துள்ளது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்களைக் கவலையடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகச் சொல்லி அதானி குழுமத்தின் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு புகார்கள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக இந்தியாவின் பங்குச்சந்தை ஆணையமான செபி அமைப்பு விசாரணை நடத்தியதில் முறைகேடுகள் எதுவும் இல்லை என்றே செபி அறிக்கை வெளியிட்டு இருந்தது.

அமெரிக்காவில் வழக்கு
அதேநேரம் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான எஸ்இசி இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்குச் சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் அனுமதி கோரியது. இது தொடர்பான தகவல்களை நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட நிலையில், அதன் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.
அதானி பங்குகள் கடும் சரிவு
இன்று காலை முதலே இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்தன. அதானி கிரீன், அதானி எண்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட அதானி குழுமப் பங்குகள் இன்று ஒரே நாளில் 15% வரை சரிந்தன. அதானி குழுமத்தில் மொத்தம் 10 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிலையில், அந்த நிறுவனங்களின் மூலதனம், ஒரே நாளில் ₹1.4 லட்சம் கோடி சரிந்துள்ளது.
அதானி குழுமத்தின் சந்தை மூலதனம் ரூ.13.6 லட்சம் கோடியில் இருந்து, ₹12.2 லட்சம் கோடியாகக் குறைந்தது. ஒரே நாளில் மிகப் பெரியளவில் பங்குகள் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்தனர். சம்மனை அதிகாரப்பூர்வ வழிகளில் அனுப்ப இரண்டு முறை முயன்ற போதிலும், அதற்கு இந்தியா மறுத்ததாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது. கையொப்பம், முத்திரை போன்ற நடைமுறை காரணங்களால் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக எஸ்இசி தனது மனு கூறியது.
என்ன காரணம்
அமெரிக்காவில் ஓர் இந்தியக் குழுமம் தொடர்பாக நடக்கும் முக முக்கியமான வழக்கு இதுவாகும். எஸ்.இ.சி. கடந்த ஆண்டு முதல் கௌதம் அதானிக்கும், அவரது மருமகன் சாகர் அதானிக்கும் சம்மன் அனுப்பக் கோரி வருகிறது. இப்போது அதன் ஒரு பகுதியாகவே அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த செய்தி வந்தவுடன் தான் அதானி குழுமத்தின் பங்குகள் மோசமாகச் சரிந்தன.
அதிகபட்சமாக அதானி கிரீன் பங்குகள் 15% சரிந்து ₹769க்கு வர்த்தகமாகியது.. அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 11% குறைந்து ₹1,859.9ஆகவும், அதானி போர்ட்ஸ் பங்குகள் 8% சரிந்து ₹1,303ஆகவும் உள்ளது. அதானி எனர்ஜி பங்குகள் 12% சரிந்து ₹814க்கு போனது. அம்புஜா சிமென்ட், ஏ.சி.சி. மற்றும் அதானி டோட்டல் கேஸ் உள்ளிட்ட பிற அதானி குழுமப் பங்குகளும் கணிசமாகச் சரிவைக் கண்டிருந்தது.
இழப்பு
இதற்கிடையில், அதானி கிரீன் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் இழப்பைச் சந்தித்ததாக அறிவித்தது. முந்தைய ஆண்டு இதே காலாண்டில் ₹492 கோடி லாபம் ஈட்டியிருந்த நிலையில், இந்தாண்டு ₹41 கோடி இழப்பைச் சந்தித்ததாக அறிவித்தது. இதுவும் கூட அதானி பங்குகள் அதிகம் சரியக் காரணமாக மாறிவிட்டது.
அதேநேரம் தன் மீதான அமெரிக்க அமைப்புகளின் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளில் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதானி நிறுவனம் கூறி வருகிறது. அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அதானி குழுமம் இதுவரை கருத்து சொல்லவில்லை.












Click it and Unblock the Notifications