ஓடுதளத்தை பார்க்க முடியலை.. அஜித் பவாரின் விமானம் விபத்தில் சிக்க காரணமே இதுதான்! ஷாக் தகவல்
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக தனி விமானம் இன்று காலை விபத்தில் சிக்கியது. இதில் அஜித் பவார் உள்பட விமானத்தில் பயணித்த 5 பேரும் பலியாகி உள்ள நிலையில் விமான விபத்துக்கு மோசமான வானிலை தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் செயல்பட்டு வருகிறார். இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார். இன்று காலையில் அஜித் பவார் மும்பையில் இருந்து சிறிய ரக தனி விமானத்தில் பாராமதிக்கு புறப்பட்டு சென்றார்.

பல்வேறு அரசியல் நிகழ்ச்சி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இந்த பயணத்தை மேற்கொண்டார். இந்த விமான பயணத்தின்போது அஜித் பவாருடன் அவருடைய ஒரு பாதுகாவலர், ஒரு உதவியாளர் சென்றனர். 2 பைலட்டுகள் விமானத்தை இயக்கினர்.
பாராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் வானில் இருந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் அஜித் பவார் உள்பட 5 பேரும் பலியாகினர். இந்த விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் முதற்கட்ட தகவலில் மோசமான காலநிலை தான் விமான விபத்துக்கு காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த விபத்து இன்று காலை 8.45 மணியளவில் நடந்துள்ளது. பாராமதி விமான நிலையத்தின் ஓடுதளம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் சரியாக அதில் விமானத்தை தரையிறக்க வேண்டும்.
இந்நிலையில் தான் விமானிகள் பாராமதி விமான நிலையத்தை நெருங்கியவுடன் விமானத்தை தரையிறக்கி உள்ளனர். அப்போது பனி மூட்டத்தால் விமானத்தில் இருந்து வெளியே இருப்பதை பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விமானத்தை சரியாக தரையிறக்க முடியாமல் அது விழுந்து நொறுங்கி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விமான விபத்து குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை தொடங்கி உள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டியில் உள்ள ஃவிமானத்தின் டேட்டா ரெக்கார்டர், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் உள்ளிட்டவற்றில் தான் விபத்தின் கடைசி நொடியில் என்ன நடந்தது? என்பது தொடர்பாக பைலட்டுகள் பேசியது பதிவாகி இருக்கும்.
அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்பிறகு தான் விமானம் விபத்தில் சிக்கியதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் தெரியவரும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications