முறைகேடு அதிகாரியுடன் அமித்ஷா.. போட்டோ பகிர்ந்த திரைப்பட இயக்குநர் அதிரடி கைது!
மும்பை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்காலுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்ததற்காக திரைப்பட இயக்குநர் அவினாஷ் தாஸை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் பூஜா சிங்கால். இவர் சுரங்க துறை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் ஜார்கண்ட்டின் குந்தி மாவட்ட கலெக்டராக இருந்தபோது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது.

ஐஏஎஸ் அதிகாரி கைது
அதாவது பூஜா சிங்கால் ரூ.18 கோடியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை துவங்கியது. இதையடுத்து அமலாக்கத்துறை அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தி பலகோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டார்.

போட்டோ பகிர்ந்த திரைப்பட இயக்குநர்
இந்நிலையில் கைதான ஐஏஎஸ் அதிகாரி பூஜா சிங்கால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை இந்தி திரைப்பட இயக்குநர் அவினாஷ் தாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அவர் பெண் ஒருவர் தேசியக்கொடியை உடலில் போர்த்தியிருக்கும் போட்டோ ஒன்றையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் வேகமாக பரவியது. இது சர்ச்சையையும் கிளப்பியது.

வழக்குப்பதிவு செய்த போலீசார்
இதையடுத்து அவினாஷ் தாஸ் மீது குஜராத் மாநிலம் அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பழைய புகைப்படத்தை பகிர்ந்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றது, மூவர்ணக்கொடி அணிந்த பெண்ணின் படத்தை பகிர்ந்து தேசியக்கொடியை அவமதித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இயக்குநர் கைது
இதன் தொடர்ச்சியாக இன்று அவினாஷ் தாஸை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர். மும்பையில் அவரது அலுவலகத்துக்கு சென்ற அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். முன்னதாக இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி அவினாஷ் தாஸ் மனுத்தாக்கல் செய்தார். அது தள்ளளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications