Asha Bhosle: இசைக்குயில் மறைந்தது.. பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
மும்பை: இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த, 'மெலடி குயின்' ஆஷா போஸ்லே (92) இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இதய செயலிழப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இசை உலகின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பது கோடிக்கணக்கான ரசிகர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய இசைத் துறையில் தவிர்க்கவே முடியாத பாடகிகளில் ஒருவர் ஆஷா போஸ்லே (Asha Bhosle). தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இவர் பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் நடிகர் ராமராஜனின் செண்பகமே செண்பகமே பாடல்.. நடிகர் ரஜினிகாந்த் நயன்தாரா நடித்த சந்திரமுகி படத்தில், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் எனத் தமிழிலும் ஏகப்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

ஆஷா போஸ்லே மறைவு
நேற்று சனிக்கிழமை மாலை, கடுமையான சோர்வு மற்றும் இதய செயலிழப்பு (Cardiac arrest) காரணமாக ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இதய செயலிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அவரது பேத்தி ஜனாய் போஸ்லே ட்வீட் மூலம் உறுதி செய்திருந்தார். இதற்கிடையே இன்று காலை அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
அவரது மரணத்தை ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் பிரதீத் சம்டானி உறுதிப்படுத்தினார். சுமார் ஏழு தசாப்தங்களாகத் தனது வசீகரிக்கும் குரலால் இந்தியத் திரையுலகை ஆட்சி செய்த ஆஷா போஸ்லேவின் மறைவு குறித்து திரையுலகமே கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறது. நாளை மாலை 4 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனை
ஆஷா போஸ்லே வெறும் பாடகி மட்டுமல்ல, அவர் ஏகப்பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அவரது இசைப் பயணம் வியப்பிற்குரியது.. தமிழ், இந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 12,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி, உலகிலேயே அதிக பாடல்களைப் பாடியவர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர். திரைத்துறையின் உயரிய விருதான 'தாதாசாகேப் பால்கே விருது' மற்றும் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான 'பத்ம விபூஷன்' ஆகியவற்றை வென்றுள்ளார்.
இவர் இரண்டு முறை தேசிய விருதுகளும் பெற்றுள்ளார். 1991ம் ஆண்டு வெளியான 'உம்ராவ் ஜான்' படத்திற்காகவும் 1987ல் வெளியான 'இஜாசத்' என இரு பாலிவுட் படங்களுக்குச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
லதா மங்கேஷ்கரின் சகோதரி
லதா மங்கேஷ்கரின் சகோதரியாகத் திரையுலகில் நுழைந்தாலும், தனக்கென ஒரு தனித்துவமான ஸ்டைலை உருவாக்கிக் கொண்டவர் ஆஷா. பாப் இசை, மெல்லிசை என அனைத்திலும் இவரது திறமை அசாத்தியமானது. தமிழில் இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அவர் பாடிய பாடல்கள் இன்றும் நம் செவிகளில் தேனாய் இனிக்கின்றன. குறிப்பாக, 'செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்'(அலைபாயுதே) , 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்' (சந்திரமுகி) போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை.
கண்ணீர்
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். "இந்தியாவின் குரல் மௌனமாகிவிட்டது" என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்ணீருடன் பதிவிட்டு வருகின்றனர். "ஆஷா போஸ்லே மறைந்திருக்கலாம், ஆனால் அவரது குரல் இந்தத் தேசத்தின் காற்றுள்ள வரை ஒவ்வொருவர் வீட்டிலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்!"












Click it and Unblock the Notifications