பாபா சித்திக் கொலை.. பரபரப்பான மகராஷ்டிரா! கொலையாளிகளை சும்மா விட மாட்டோம்! ஏக்நாத் ஷிண்டே காட்டம்.!
மும்பை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்த முக்கிய தலைவரான பாபா சித்தி மும்பையில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது குற்றவாளியை தேடி வருவதாகவும், கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார் மகாராஷ்டிரா முதல்வரான ஏக்நாத் ஷிண்டே..
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக - சிவசேனா ( ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் ( அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில வாரங்களில் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது.
மேலும் எதிர்க் கட்சிகளான சிவசேனா ( உத்தவ் தாக்கரே)- தேசியவாத காங்கிரஸ் ( சரத் பவார்) - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்த இவரது வருகை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மிக சக்தி வாய்ந்த இஸ்லாமிய அரசியல் தலைவர்களில் ஒருவராக பாபா சித்திக் பார்க்கப்பட்டார். மேலும் சமூக நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை போன்ற பல்வேறு விவகாரங்களில் பாபா சித்திக்கின் நடவடிக்கைகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.
மேலும் ஆண்டுக்காண்டு இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத் தலைவர்கள், அரசியல் கட்சியினர், பாலிவுட் பிரபலங்களை வரவழைத்து மிக பிரம்மாண்டமாக நடத்துவது வழக்கம். கொரோனா பெருந்தொற்றின் போது பாபா சித்திக்கின் நடவடிக்கைகள் மக்களிடையே பேசுபொருளாக இருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இருந்து விலகி அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மும்பையில் திடீரென்று அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ள நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டவுடன் பல இடங்களில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
தொடர்ந்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு மகாராஷ்டிரா உள்துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் விரைந்துள்ளனர். தொடர்ந்து கொலை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பாபா சித்திக் கொலைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் மகாராஷ்டிரா முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டே. இதுதொடர்பாக பேசிய அவர்,” பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினரிடம் பேசி உள்ளேன். துப்பாக்கிச் சுற்றில் ஈடுபட்ட ஒருவர் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது குற்றவாளி தலைமறைவாகி இருக்கிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சட்டம் ஒழுங்கை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பை காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மும்பை போலீசார் விரைவில் மூன்றாவது குற்றவாளியை கைது செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ”எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications