மகாராஷ்டிரா தேர்தலில் வரலாறு படைக்க ரெடியாகும் பாஜக! போட்டியிட்ட 149 தொகுதிகளில் 128ல் முன்னிலை!
மும்பை: மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் பாஜக 122 தொகுதிகளை வென்றிருந்தது. இம்மாநிலத்தில் பாஜக வென்ற அதிகபட்ச தொகுதிகள் இதுதான். ஆனால் இந்த முறை 128 தொகுதிகளில் கட்சி முன்னிலையில் இருக்கிறது. எனவே, பாஜக இந்த முறை நிச்சயம் தேர்தலில் வரலாறு படைக்கும் என அக்கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அடிப்படையில் சிவசேனா சித்தாந்தம் கொண்ட மாநிலமாகும். ஆனால் தேர்தல் அரசியலில் பாஜகதான் இங்கு கிங் மேக்கர். ஒவ்வொரு முறை சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும், சிவசேனாவை விட பாஜக அதிக வாக்குகளை பெற்று கூடுதல் தொகுதிகளில் வெற்றியடைந்திருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக தேர்தல் வரலாற்றில் உச்சத்தை தொட்டிருந்தது. அதாவது அந்த ஆண்டு இக்கட்சி 122 இடங்களை வென்றிருந்தது. மொத்தமாக பாஜக கூட்டணி 185 இடங்களை பெற்றிருந்தது.

மாநிலத்தின் மொத்த எம்எல்ஏ சீட் எண்ணிக்கை 288. ஆட்சியமைக்க 145ல் வெற்றி பெற்றால் போதும். ஆனால், பாஜக கூட்டணி அசுரத்தனமான மெஜாரிட்டியை பெற்றிருந்தது. இதற்கடுத்த 2019 தேர்தலில் பாஜக இந்த அளவுக்கான வெற்றியை பெறவில்லை. மொத்தம் 105 தொகுதிகளில்தான் வென்றிருந்தது. கடந்த தேர்தலை விட இது 17 இடங்கள் குறைவாகும். இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. அதிலும், உத்தவ் தாக்ரே பாஜகவை விட்டு வெளியே வந்துவிட்டதால் பாஜக நிச்சயம் அடிவாங்கும் என்று பேசப்பட்டது.
ஆனால் இந்த விமர்சங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது, காலை 11 மணி நிலவரப்படி பாஜக 128 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இது கடந்த 2014ல் பாஜக நிகழ்த்தி காட்டிய மேஜிக்கை விட அதிகமான நம்பராகும். முன்னிலையில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால், மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் பாஜக மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிடும். இந்த முறை பாஜக 149 தொகுதிகளில் போட்டியிருட்டிருந்தது.
மறுபுறம் காங்கிரஸ் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பல வியூகங்களை வகுத்து களமிறங்கி இருந்தது. இந்த வியூகங்கள் எதுவும் பலன் அளிக்காமல் போய்விடும்.
இதில் இன்னொரு சலசலப்பு எழ வாய்ப்பிருக்கிறது. அதாவது பாஜக 128 தொகுதிகளை கைப்பற்றினாலும் கூட்டணி உதவி இல்லாமல் அக்கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, யார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற பஞ்சாயத்து வெடிக்க வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications