ஜெய் ஸ்ரீராம்: பாஜக கோஷத்தால் அதிர்ந்த மேடை- “அட அமைதியா இருங்கப்பா” மீண்டும் மீண்டும் சொன்ன ஆளுநர்!
மும்பை : மகாராஷ்டிரா துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்கத் தயாரான நிலையில், பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே என தொடர்ந்து கோஷமிட்டனர்.
அவர்களை அமைதியாக இருக்குமாறு ஆளுநர் கோஷ்யாரி பலமுறை கையசைத்ததோடு, மைக்கிலும் அமைதியாக இருங்கள் என்று தொடர்ந்து சொன்னார்.
ஆனாலும் தொடர்ந்து கோஷம் எழுப்பிய பாஜகவினர், ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆரம்பித்து பட்னாவிஸ் பதவியேற்கத் தொடங்கிய பின்னரே நிறுத்தினர்.

சிவசேனா ஆட்சி
மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது சிவசேனா. தேர்தலில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்றால் சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என குண்டைத் தூக்கிப்போட்டது சிவசேனா. தேர்தலுக்கு முன்பு இதுபற்றி பேசவே இல்லையே, சுழற்சி முறையில் முதல்வர் பதவி எல்லாம் வாய்ப்பே இல்லை என மறுத்தது பாஜக. இதனால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

உத்தவ் தாக்கரே
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது சிவசேனா. அதற்குள் அஜித் பவாரை தன் பக்கம் இழுத்து, ஆளுநர் உதவியோடு முதல்வராக பொறுப்பேற்றார் தேவேந்திர பட்னாவிஸ். அவருக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில் 4 நாட்களில் பதவி விலகினார். பின்னர், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆட்சி நடந்து வந்தது.

ஏக்நாத் ஷிண்டே
இந்நிலையில்தான், சிவசேனாவின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 39 பேர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்களை சமரசப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்குப் பின்னணியில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

ராஜினாமா
இந்நிலையில் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து, உடனடியாக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறும், கடிதம் அளித்தார். இதையடுத்து, இன்றைய தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தொடர்ந்த வழக்கில், வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்து நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை ஏற்ற உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை நேற்று இரவே ராஜினாமா செய்தார்.

பதவியேற்பு
இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள், பா.ஜ.கவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தனர். அதன்படி, தங்கள் தரப்பு ஆதரவு கடிதத்துடன் ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். அவர்களை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். இதையடுத்து முதல்வராக ஏக் நாத் ஷிண்டே, துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

துணை முதல்வராக
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்க தயாரான நிலையில், அங்கிருந்த பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே என தொடர்ந்து கோஷமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு ஆளுநர் கோஷ்யாரி பலமுறை கையசைத்ததோடு, மைக்கிலும் அமைதியாக இருங்கள் என்று சொன்னார். ஆனாலும் தொடர்ந்து கோஷம் எழுப்பிய அவர்கள், ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆரம்பித்து பட்னாவிஸ் பதவியேற்கத் தொடங்கிய பின்னரே நிறுத்தினர்.

மீண்டும் கோஷம்
தேவேந்திர பட்னாவிஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் ஏற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் கோஷங்களை தொடங்கிய பாஜகவினர் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் பதவியேற்பு விழா அரங்கில் பரபரப்பு நிலவியது. இதேபோல ஏக்நாத் ஷிண்டே பால் தாக்கரேவின் பெயரைச் சொல்லி பதவியேற்கும்போதும் தொடர் முழுக்கங்கள் எழுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications