படப்பிடிப்பில் தூக்கிட்டு தற்கொலை.. டிவி நடிகை துனிஷா சர்மா வழக்கில் திடீர் ட்விஸ்ட்..சக நடிகர் கைது
மும்பை: மகாராஷ்டிராவில் பிரபலமான தொலைக்காட்சி நடிகையாக வலம் வந்த துனிஷா சர்மா நேற்று படப்பிடிப்பு தளத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரண வழக்கை விசாரித்து வரும் போலீசார், துனிஷாவுடன் நடித்து வந்த சக நடிகரான ஷீஷன் முகம்மது கானை கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா. 20 வயதான இவர் மகாராஷ்டிர மாநிலத்தில் மிகவும் பிரபலமான தொலைக்கட்சி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
பாரத் கா வீர் புத்ரா -மகாரானா பிரதாப் என்ற சீரியல் மூலமாக அறிமுகம் ஆன துனிஷா, "பித்தூர், பார் பார் டேகோ, காஹானி 2, துர்கா ரானிசிங், தபாங் -3 ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை
வளர்ந்து வரும் இளம் நடிகையாக வலம் வந்த துனிஷா நேற்று அலிபாபா தஸ்தான் - இ - காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தார். படபிடிப்பின் போது டீ பிரேக் விடப்பட்டது. அப்போது ரெஸ்ட் ரூம் சென்ற துனிஷா அதன்பிறகு நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால், படக்குழுவினர் கதவை தட்டியிருக்கின்றனர். ஆனாலும் கதவு திறக்கப்படாததால் எதோ விபரீதம் நடப்பதை உணர்ந்த படக்குழுவினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தற்கொலைக்கு தூண்டியதாக
போலீசார் கதவை உடைத்து பார்த்ததில் அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்கொலை மற்றும் கொலை என இரு கோணங்களிலும் விசாரணை செய்து வருவதாக தெரிவித்த போலீசார், துனிஷா இறந்த இடத்தில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றனர். இதனிடையே, துனிஷாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் அவருடன் நடித்து வந்த நடிகர் ஷீசன் முகம்மது கான் மீது தற்கொலைக்கு தூண்டியதாக அவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிசுகிசுக்களில் சிக்கியிருந்தது
ஷீஷன் முகம்மது கானிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துனிஷா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷீஷன் முகம்மது கான், ஜோதா அக்பர் படத்தில் இளம் வயது அக்பராக நடித்து இருக்கிறார். பல்வேறு நாடகங்களில் நடித்துள்ள ஷீஷன் முகம்மது கான், துனிஷா ஷர்மாவுடன் இணைந்து நடித்த போது கிசுகிசுக்களில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள ஷீஷன் முகம்மது கான் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சம்மன் விடுத்ததால்..
இந்த நிலையில், துனிஷா ஷர்மாவுடன் இணைந்து நடித்து வந்த நடிகர் பார்த் ஜூட்ஷியை விசாரணைக்கு ஆஜராகுமாறு வாலிவ் நகர போலீசார் சம்மன் விடுத்து இருந்தனர். இதை ஏற்று போலீஸ் விசாரணைக்கு பார்த் ஜூட்சி ஆஜரானார். இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பார்த் ஜூட்சி கூறியதாவது:- "போலீசார் விசாரணைக்கு வருமாறு சம்மன் விடுத்ததால் நான் விசாரணைக்கு வந்தேன்.

நான் பேசுவது சரியாக இருக்காது
போலீசார் பொதுவான கேள்விகளை எழுப்பினர். நடிகை துனிஷாவிற்கு இருந்த ரிலேஷன்ஷிப் குறித்து நான் பேசுவது சரியாக இருக்காது. அவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக எனக்கு அந்த ஐடியாவும் இல்லை. அவரது சொந்த பிரச்சினையாக இருக்கலாம்" என்றார். மேலும், துனிஷா தற்கொலை செய்து கொண்ட படப்படிப்பு தளத்தில் தான் இல்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications