நில மோசடி வழக்கு: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் அதிரடி கைது
மும்பை: நில மோசடி வழக்கில் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு மிக நெருக்கமானவர் சஞ்சய் ராவத். உத்தவ் தாக்கரே ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுக்க தீவிரமாகப் போராடிப் பார்த்தவர். அப்போது பத்ரா சால் மோசடி விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுத்ததது.

மும்பை கோரகாவ் பகுதி பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி விவகாரத்தில் ரூ.1,034 கோடி நில மோசடி நடந்ததாக சஞ்சய் ராவத் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே சஞ்சய் ராவத்துக்கு மிக நெருக்கமான பிரவீன் ராவத் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான சொத்துகள் பலவற்றையும் அமலாக்கப் பிரிவு ஏற்கனவே முடக்கி வைத்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் பத்ரா சால் நில முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது. முதலில் இந்த சம்மனை ஏற்க மறுத்த சஞ்சய் ராவத் பின்னர் விசாரணைக்கு ஆஜரானார். ஆனாலும் அப்போதே சஞ்சய் ராவத் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
வழக்கம் போல இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றே சஞ்சய் ராவத் விமர்சித்து வந்தார். இந்நிலையில் இன்றும் பத்ரா சால் நில மோசடி வழக்கில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 9 மணிநேரம் நடந்தது.
9 மணிநேரம் நடைபெற்ற இந்த சோதனையைத் தொடர்ந்து சஞ்சய் ராவத், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். முன்னதாக இன்று காலை முதல் தமது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக சஞ்சய் ராவத் பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதில், நான் சிவ சேனையை விட்டு விலக மாட்டேன். எனது உயிர் போனாலும் நான் சரணடைய மாட்டேன். ஜெய் மகாராஷ்டிரா! இந்த ஊழலுக்கு எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை சிவ சேனா கட்சியின் தலைவர் தாக்கரேயின் மீது ஆணையிட்டு சொல்கிறேன். பாலாசாகேப் எங்களுக்கு போராட கற்று தந்துள்ளார். சிவ சேனாவுக்காக நான் தொடர்ந்து போராடுவேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications