”நான் சொல்றத கேட்டா ஆட்சி தப்பிக்கும்..” மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு ஏக்நாத் ஷிண்டே விதித்த நிபந்தனை
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி தப்பிக்க முக்கிய நிபந்தனைகளை அக்கட்சியின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Recommended Video
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.
ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

வளைக்க முயன்ற பாஜக
சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சிக்கு மொத்தம் 169 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை பல வகைகளில் வளைக்க முயன்றது பாஜக. அதன் பயனாக மாநிலங்களவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தலில் பாஜகவின் ஆட்டத்துக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது.

குதிரைபேர அரசியல்
இதனால் சிவசேனா கட்சிக்குள் தலைமைக்கு எதிரான அதிருப்தி மனநிலை எழத் தொடங்கியது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதை உணர்ந்த பாஜக தனது வழமையான குதிரை பேர முறையை கையில் எடுத்து இருக்கிறது. பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சிவசேனா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டு உள்ளனர். அவர்களில் 5 பேர் அமைச்சர்கள் என்றும் ஒருவர் சுயேட்சை எம்.எல்.ஏ என்றும் கூறப்படுகிறது.

ஏக்நாத் ஷிண்டே விதித்த நிபந்தனை
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் இவர்களுடன் சேர்த்து அக்கட்சியின் பலம் 134 ஆக அதிகரிக்கும். ஆனால், ஆட்சியை கைப்பற்ற மேலும் 11 எம்.எல்.ஏக்கள் தேவை. இந்த நிலையில், சிவசேனா தலைவர் மிலிந்த் நர்வேகர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்துப் பேசினார். அப்போது, தன்னுடன் 35 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும், பாஜகவுடன் சிவசேனா கூட்டணி வைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரேவுடன் ஏக்நாத் பேச்சு
முதலமைச்சர் பதவிக்கு தான் ஆசைப்படவில்லை என உத்தவ் தாக்கரேவிடம் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் சிவசேனா எம்.எல்.ஏக்களையும் கட்சித் தொண்டர்களையும் பாஜக துன்புறுத்துவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை என பதிலளித்துள்ளார்.

ஏக்நாத் மீது நடவடிக்கை
மேலும் தன் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் உத்தவ் தாக்கரேவிடம் ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏக்களுடன் சூரத் சென்ற தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே அவர் சிவசேனா எம்.எல்.ஏக்கள் குழு தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
