8 மாதங்கள் சிறை.. ஆனால் ஒரு நாள்கூட விசாரணை இல்லை.. உபா சட்டத்தில் கைதான ஸ்டேன் சுவாமி காலமானார்
மும்பை: எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் ஜாமின் மனு மதியம் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி கடந்த 2020ஆம் ஆண்டு எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். பர்கின்ஸன் நோய் உட்பட பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட இவருக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை.
கடந்த எட்டு மாதங்களாகவே மும்பையிலுள்ள தலோஜா மத்தியச் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும்,84 வயதான சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.

ஜாமீன் மனு
இதையடுத்து இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அவருக்கு மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. உடல்நிலை மோசமடைந்ததால் ஸ்டேன் சுவாமி தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மதியம் 2.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டேன் சுவாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ஸ்டேன் சுவாமிக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் முக்கியமான ஒன்றைச் சொல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

உயிரிழப்பு
அப்போது மருத்துவர் தவூசா கூறுகையில், "சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் ஸ்டேன் சுவாமிக்கு திடீரென மராடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரை காப்பாற்ற எங்களால் முடியவில்லை. இன்று மதியம் 1.30 மணிக்கு அவர் உயிரிழந்தார்" என்றார். ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு செய்தி தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், தாங்கள் தான் அவரை மருத்துவமனைகளில் அனுமதிக்க முதலில் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டனர்.

ஒரு நாள் கூட விசாரணை இல்லை
வழக்கறிஞர் மிஹிர் தேசாய் கூறுகையில், "ஸ்டேன் சுவாமிக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஹோலி ஃபேமலி மருத்துவமனையின் சிகிச்சையில் எந்த புகாரும் இல்லை. ஆனால், சிறை மருத்துவமனை எப்படி அவருக்கு கொரோனா பரிசோதனைகூட நடத்தாமல் இருந்தனர் என்பது எங்களுக்குப் புரியவில்லை. இது குறித்து நீதிமன்றம் உரிய விசாரணை நடத்த வேண்டும். ஸ்டேன் சுவாமி கடந்த எட்டு மாதங்களாகச் சிறையிலிருந்தார். இருப்பினும் ஒரு நாள் கூட அவரை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்கு எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.

குடும்பம் இல்லை
ஸ்டேன் சுவாமிக்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதால் அவரது உடலை, செயின்ட் சேவியர் கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வர் பிதா பிரான்சிஸிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அவர் நீதிமன்ற காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளதால், ஸ்டேன் சுவாமி உடலை உடற்கூராய்வு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Recommended Video

கொரோனா பாதிப்பு
ஸ்டேன் சுவாமிக்கு சில வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது. அதிலிருந்து அவர் குணமடைந்த போதிலும், இதில் அவரது நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர். தற்போது கொரோனா நெறிமுறைகள் அமலில் இருப்பதால், சிறியளவில் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று வழக்கறிஞர் மிஹிர் தேசாய் தெரிவித்தார். மேலும், ஸ்டேன் சுவாமியின் உடல் மும்பையிலேயே புதைக்கப்படும் என்றும் வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற விசாரணை
முன்னதாக, கடந்த மே 28ஆம் தேதி விசாரணையின் போது தான், அவரை சிறை மருத்துவமனையில் இருந்து ஹேலி -ஃபேமலி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், தனக்கு ஜாமீன் வழங்கினால் உடல்நிலைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியாக இருக்கும் என்று கூறி ஹேலி -ஃபேமலி மருத்துவமனையில் அனுமதியாக மறுத்தார். அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஹேலி -ஃபேமலி மருத்துவமனையில் ஸ்டேன் சுவாமி அனுமதியானார்.

ஸ்டேன் சுவாமி
ஸ்டேன் சுவாமி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர், அவர் பழங்குடியினரின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்தச் சூழலில் தான் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கடந்த ஆண்டு அவர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிலேயே ஸ்டேன் சுவாமி தான் மிகவும் வயதான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications