மகாயுதி சுனாமியில் காலி! 60 ஆண்டுகளில் இல்லாத நிலை.. மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவர் கிடையாது
மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு வெறும் 55 இடங்களே கிடைத்துள்ளது. மகாராஷ்டிராவில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து யாருக்கும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை கண்டிராத வகையில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கூட்டணி 234 தொகுதிகளில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்க மகாயுதி கூட்டணி தயாராகி வருகிறது.

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் ஏக்னாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. முதல்வராக ஏக்னாத் ஷிண்டே பதவி வகித்து வருகிறார். மகாராஷ்டிர 14 வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் 26 ஆம் தேதியுடன் காலாவதி ஆவதால் அதற்குள் புதிய அரசு அமைக்க தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது.
அதன்படி கடந்த 21 ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆளும் மகாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெரும் என்று பேசப்பட்டது.
கருத்துக்கணிப்பில் வெளியானபடியே நேற்றைய தேர்தல் முடிவும் அமைந்துவிட்டது. மொத்தமாக காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரசை திணறடித்துவிட்டது மகாயுதியின் சுனாமி. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 234 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது. பாஜக 132 இடங்களிலும், ஏக்னாத் ஷிண்டேவின் சிவசேனா 57, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்றது.
மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமாகவே 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. அதிகபட்சமாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களும், காங்கிரஸ் 16, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளும் வெற்றி பெற்றன. இதற்கிடையே மகாராஷ்டிராவில் 60 ஆண்டுகளில் முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கிடைக்க மொத்தம் உள்ள இடங்களில் குறைந்தது 10 சதவீத இடத்தை ஒரு கட்சி பெற வேண்டும். அதன்படி பார்த்தால் 28 தொகுதிகளை எதிர்க்கட்சி கூட்டணியில் யாரும் பெறவில்லை. அதிகபட்சமாக உத்தவ் சிவசேனா 20 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதற்கு முன்பாக கடந்த 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளிள் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை இருந்தது.
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணி நாளை ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. எனினும் முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடித்து வருவதால், நாளைக்குள் கூட்டு முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, இன்று பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தங்கள் கட்சியின் சட்டசபை குழு தலைவரை தேர்வு செய்ய உள்ளது.












Click it and Unblock the Notifications