எனக்கும் அழைப்பு வந்தது.. ஆனால் நான் அப்படி அல்ல.. மவுனம் கலைக்கும் சஞ்சய் ராவத்!
மும்பை: அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டிருந்த சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ-க்களிடம் இருந்து, தனக்கும் அழைப்பு வந்ததாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காக எதிராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே திடீரென போர்க்கொடி தூக்கினார். 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களுடம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்ட அவர், பாஜக ஆதரவுடன் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

அமலாக்கத்துறை நோட்டீஸ்
இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் ஏக்நாத் ஷிண்டே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே மகாராஷ்டிரா அரசியல் பரபரப்பின் உச்சத்தில் இருந்தபோது, சிவசேனாவின் சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. பத்ரா சாவல் நிலமோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஏக்நாத் ஷிண்டே நீக்கம்
தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியில் இருந்து நீக்கி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராவத் கருத்து
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , தான் நம்பிக்கையுடன் அமலாக்கத்துறை விசாரணைக்குச் சென்றேன். ஏனெனில் என் மேல் எந்தத் தவறும் இல்லை. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களிடம் இருந்து தனக்கும் அழைப்பு வந்தது. ஆனால், நான் அதனை ஏற்கவில்லை.
பால் தாக்கரேவின் உண்மையான விசுவாசி நான். ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் முதலமைச்சர் அல்ல. உத்தவ் தாக்கரே ஏற்கனவே இதுகுறித்து விளக்கமளித்துவிட்டார். உத்தவ் தாக்கரேவுடன் இருப்பவர்கள் தான் சிவசேனா கட்சியினர். ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக்கியதன் மூலம் பாஜக சிவசேனாயை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது என்று தெரிவித்துளார்.

தொடக்கமே சர்ச்சை
மேலும், மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் அதிருப்தி சிவசேனா கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில், கட்சியினர் தரப்பில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கொண்டாட்டத்தில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஆட்சி முழுமையாக அமைப்பதற்கு முன்னதாக சர்ச்சை எழுந்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications