மகாராஷ்டிரா ஆளும் பாஜக அரசுக்கு பெரும் மிரட்டலாக இருக்கும் தமிழ்நாடு பொருளாதாரம்- எப்படி தெரியுமா?
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசுக்கு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் சவாலாக இருந்து வருகிறது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். மகாராஷ்டிரா மாநில அரசின் பட்ஜெட்டை முன்வைத்த விவாதங்களில்தான் தமிழ்நாடு, அம்மாநில அரசின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் புதிய பாஜக கூட்டணி அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இந்த பட்ஜெட்டை முன்வைத்து பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகையில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு மாநிலத்தின் பொருளாதாரம் எப்படியான சூழ்நிலையில் இருக்கிறது நன்றாகவே தெரியும். மகாராஷ்டிராவின் கடன் அளவு ரூ.8 லட்சமாக உள்ளது; நிதிப் பற்றாக்குறை என்பது ரூ. 1 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. இதில் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு மட்டுமே ரூ. 46,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது மகாராஷ்டிரா அரசு.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன் இருக்கும் முக்கியமான சவாலே அம்மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான்; மகாராஷ்டிராவின் தொழில்துறை வளர்ச்சியில் மந்த நிலை காணப்படுகிறது. மகாராஷ்டிரா மாநில அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் டாவோஸ் மாநாட்டில் ரூ15 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கையெழுத்திட்டிருக்கிறார்; ஆனாலும் பொருளாதார பயணத்தில் மகாராஷ்டிரா பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிராவின் நிலைமையை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு எளிதாக விளக்கிவிட முடியும். 2024-ம் ஆண்டு நாட்டின் மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் மகாராஷ்டிராதான் முதலிடம்; தமிழ்நாடு 2-வது இடம்தான். ஏனெனில் மகாராஷ்டிராவின் மும்பைதான் இந்தியாவின் வர்த்தக தலைநகர்; இதனால் இயல்பாகவே மகாராஷ்டிராவின் பொருளாதாரம் முன்னிலை இடத்தில் இருக்கிறது; இது ஆச்சரியமானது இல்லைதான்.
ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமும் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.42.67 லட்சம் கோடி.. இதனால் மாநில உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் தனிநபர் மாநில உள்நாட்டு உற்பத்தியானது 2.89 லட்சமாக மட்டுமே இருக்கிறது.
தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியானது ரூ31.55 லட்சம் கோடி மட்டும்தான். மகாராஷ்டிராவை ஒப்பிடுகையில் தம்ழிநாடு பின் தங்கிதான் இருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டின் தனிநபர் மாநில உள்நாட்டு உற்பத்தியானது ரூ. 3.50 லட்சமாக உள்ளது. இதனை மிக எளிதாக விளக்க வேண்டுமானால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரை விட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் பணக்காரராக திகழ்கிறார். இத்தகைய சூழ்நிலையை சமன் செய்ய வேண்டிய அல்லது சீர்படுத்த வேண்டிய நெருக்கடியில்தான் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications