”கூடா” நட்போடு குதூகலமா? ”இந்தியா” அணியில் பாஜகவின் ஸ்லீப்பர் செல் சர்த்பவார்? கொதிக்கும் கட்சிகள்!
மும்பை: எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியில் மீண்டும் புகைச்சலை கிளப்பிவிட்டுள்ளார் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத்பவார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பல மாநிலங்களில் நேருக்கு நேர் மோதக் கூடியவை. ஆனாலும் தேசிய அளவிலான நடவடிக்கைகள் என்பதால் ஒரே அணியில் இணைந்திருக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸின் ஒரு பிரிவு இடம் பெற்றுள்ளது. அதேநேரத்தில் சரத்பவார் தலைமையிலான பிரிவு, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. இருந்த போதும் சரத்பவார் மீது "இந்தியா' கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து நம்பகத்தன்மை இல்லாமல் இருக்கின்றனர்.
சர்ச்சைகளும் சரத்பவாரும்: என்னதான் சரத்பவார் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் பாஜகவுடன் இணக்கமான உறவை கொண்டிருப்பவர் என்பது ஒரு கருத்து. பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்று பேசுகிறவர். காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளால் பிரதமர் மோடியுடன் இணைத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிற தொழிலதிபர் அதானியுடன் நட்பு பாராட்டுகிறவர்.. இவைதான் சரத்பவார் மீதான நம்பகத்தன்மைக்கு காரணங்கள்.

அதானியுடன் சந்திப்பு: இதனை உறுதிப்படுத்தும் வகையில் சில மாதங்களுக்கு முன்னர் சரத்பவாரை அதானி அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு 2 மணிநேரம் நடந்தது. அப்போது சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலும் "இந்தியா" கூட்டணியின் கூட்டத்திலும் சரத்பவார் பங்கேற்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதானி தொழிற்சாலை திறப்பு: இப்போது சரத்பவார் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தில் அதானி குழுமத்தின் நிறுவனம் ஒன்றை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிற படம்தான் அது. இதுதான் இப்போதைய கொந்தளிப்புக்குக் காரணமாக உருவெடுத்திருக்கிறது.
It was a privilege to inaugurate India’s first Lactoferrin Plant Exympower in Vasna , Chacharwadi , Gujarat along with Mr. Gautam Adani pic.twitter.com/G5WH9FaO5f
— Sharad Pawar (@PawarSpeaks) September 23, 2023
பாஜகவின் ஸ்லீப்பர் செல்?: அதானியை இடைவிடாமல் "இந்தியா" கூட்டணி தலைவர்கள் தாக்கி பேசுகின்றனர். ஆனால் சரத்பவாரோ அதானியுடன் மிக மிக நெருக்கமான உறவை வளர்த்து வருகிறார். என்னதான் நட்பு என்று சொல்லப்பட்டாலும் தேச நலன் கருதி உருவாக்கப்பட்டிருக்கும் "இந்தியா" கூட்டணிக்கு என்னதான் மரியாதை வைத்திருக்கிறார் சரத்பவார்? அப்படியானால் "இந்தியா" கூட்டணிக்குள் நுழைந்துவிட்ட பாஜகவின் ஸ்லீப்பர் செல்லா சரத்பவார்? என்கிற குமுறல்களை இந்தியா கூட்டணியின் சில தலைவர்கள் சமூக வலைதளங்களில் கொட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications