ஆஹா.. கை துடைக்க 500 ரூபாய் நோட்டுகள்? அம்பானி வீட்டு விழாவால் வாய்பிளந்த நெட்டிசன்கள்..உண்மை என்ன?
மும்பை: இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது மனைவி நீதா அம்பானியுடன் சேர்ந்து மும்பையில் பிரமாண்டமான கலாசார மையத்தை தொடங்கி உள்ளார். இதன் தொடக்கவிழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு கைத்துடைக்க டிஸ்யூ பேப்பருக்கு பதில் ரூ.500 வழங்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் போட்டோக்கள் வெளியான நிலையில் நெட்டிசன்கள் வாய்ப்பிளந்துள்ளனர். இந்நிலையில் தான் உண்மையில் நடந்தது என்ன? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் முக்கிய நபராக முகேஷ் அம்பானி உள்ளார். தற்போது பல்வேறு துறைகளில் தனது தொழிலை அவர் விரிவுப்படுத்தி வருகிறார். பெரும் பணக்காரர் என்பதாலே அவரது வீட்டில் நடக்கும் விசேஷங்கள் கோடீஸ்வரர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவராலும் உற்று கவனிக்கப்படும்.
மேலும் முகேஷ் அம்பானி உள்பட அவரது குடும்பத்தினர் பயன்படுத்தும் பொருட்களின் மதிப்பு குறித்த செய்திகளும் அவர்களின் வீடுகளில் பணியாற்றும் பணியாளர்களின் சம்பளங்கள் தொடர்பான விவரங்களும் அவ்வப்போது இணையதளங்களில் விவாதத்தை கிளப்புவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

கலாசார மையம் திறப்பு
அந்த வரிசையில் தான் தற்போது முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதியின் விவகாரம் ஒன்று பேசும் பொருளாகி உள்ளதோடு, நெட்டிசன்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது. அதாவது முகேஷ் அம்பானி தனது மனைவி பெயரில் கலாசார மையம் ஒன்றை அமைக்க முடிவு செய்தார். அதன்படி மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் ஜியோ வேர்ல்டு சென்டர் வணிக வளாகத்தில் ‛நீதா முகேஷ் அம்பானி கலாசார மையம்' கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

பங்கேற்ற பிரபலங்கள்
இந்த விழாவில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளவர்கள் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவுடன் விழாவில் பங்கேற்றார். ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

விவாதத்தை கிளப்பிய ஸ்வீட்
விழாவில் பங்கேற்றவர்களுக்கு உயர்தரமான விருந்துகள் பரிமாறப்பட்டன. மேலும் பல்வேறு ஸ்வீட்டுகள், ஐஸ்கிரீம்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட இனிப்பு வகைகளில் ஒன்று தான் தவுலத் கி சாட். பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த இனிப்பு வகையில் உலர் பழங்களும் இடம்பெற்றிருக்கும். பணக்காரர்களின் இனிப்பு வகை என அழைக்கப்படும் தவுலத் கி சாட் ஒன்று டெல்லியில் உள்ள பிரபல தி இந்தியன் அக்சன்ட் ரெஸ்டாரண்டில் ரூ.725க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இது தற்போது விவாதத்தை கிளப்பவில்ல.

ரூ.500 நோட்டுடன் பரிமாற்றம்
மாறாக இந்த தவுலத் கி சாட் ஸ்வீட்டானது விருந்தினர்களுக்கு 500 ரூபாய் நோட்டுடன் பரிமாறப்பட்டுள்ளது என்பது தான் பேசும்பொருளாகி உள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகின. அதனை பார்த்த பலரும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பியதோடு, அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் டிஸ்யூ பேப்பருக்கு பதில் ரூ.500 வைத்து ஸ்வீட் பரிமாறப்பட்டுள்ளதாக கூறினர். இதனை பார்த்த நெட்டிசன்கள் வியப்படைந்தனர். மேலும் இது இணையதளங்களில் பேசும்பொருளானது. பலரும் இதன் உண்மை நிலை பற்றியும் கேள்வி எழுப்பினர்.

உண்மை என்ன?
இந்நிலையில் தான் அம்பானி கலாசார மையம் திறப்பு விழாவில் வழங்கப்பட்ட ஸ்வீட்டுடன் 500 ரூபாய் நோட்டு வழங்கப்பட்டது உண்மைதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அந்த 500 ரூபாய் என்பது உண்மையான நோட்டு அல்ல. அது போலியானது. அதாவது கலாசார மைய திறப்பு விழாவில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை அழகாக காட்ட சில முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தான் தவுலத் கி சாட் ஸ்வீட்டில் போலியான 500 ரூபாய் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications