ஆரம்பிச்சாச்சு! மும்பையில் கூடிய ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள்.. ஒருங்கிணைப்பாளர் தேர்வு?
மும்பை: மும்பையில் இன்று'இந்தியா' கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. 28 கட்சிகளின் 63 தலைவர்கள் மும்பையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
எம்பி தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, "இந்தியா" என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

ஆலோசனை: அந்தவகையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 24-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2வது ஆலோசனை கூட்டம் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் பெங்களூரூவிலும் நடைபெற்றது. இந்த 2வது கூட்டத்தில்தான், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு, "இந்தியா" என்று பெயர் சூட்டப்பட்டது.. இந்த கூட்டணியின் 3வது கூட்டம், இன்றும், நாளையும் மும்பையில் நடக்க போகிறது..
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மும்பை செல்கிறார்.. கூட்டம் முடிந்து நாளையே சென்னை திரும்ப உள்ளார்.. முதல்வருடன் மூத்த தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோரும் செல்கிறார்கள். ஏற்கனவே, பாட்னா மற்றும் பெங்களூரில் நடந்த "இந்தியா கூட்டணி" கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். இப்போது மும்பையில் நடைபெறும் 3வது கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
என்ன காரணம்: இந்த கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்க வாய்ப்புள்ளதாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அவரது மும்பை பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று நடைபெற உள்ள கூட்டத்தில், முக்கிய முடிவுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், இரவில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே அளிக்கும் விருந்திலும் பங்கேற்கிறார்.
இன்று நடக்க போகும் கூட்டத்தில், பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஆலோசித்து முடிவு எட்டப்படலாம் என்கிறார்கள். ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்குபிறகே பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் பி.எல்.புனியா ஏற்கனவே கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, வெற்றி பெற்ற எம்பிக்கள் இணைந்து பிரதமரை தேர்வு செய்வார்கள் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.
தொகுதி பங்கீடு: எனவே, இன்று நடக்கும் கூட்டத்தில், எம்பி தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.. ஆனால், இதுகுறித்தும் காங்கிரஸின் நானா படேல், தொகுதி பங்கீட்டில் கட்சிகளுக்கு இடையே எந்த போட்டியும் இல்லை என்று கூறியிருந்தார். அப்படியானால், இன்று நடக்கும் கூட்டத்தில் என்ன விவாதிக்க போகிறார்கள்? பாஜகவை வீழ்த்த, மூத்த தலைவர்கள் என்ன முடிவு எடுக்க போகிறார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
பாஜகவுக்கு இந்த இந்தியா கூட்டணி கடும் போட்டியை அளிக்கும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும்நிலையில், இன்றைய கூட்ட நிகழ்வினை, பாஜகவும் உற்று கவனித்தே வருகிறது.
இந்நிலையில், I.N.D.I.A. கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்.. முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மும்பையில் ‛இந்தியா' கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி பங்கேற்றுள்ளனர். மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர்.
திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலு எம்பி கலந்து கொண்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் இருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.‛இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நாளை தேர்வு செய்யப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications