ஈரானிய கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்.. அதிரடியாக மீட்டது ஐஎன்எஸ் சுமித்ரா.. ஏமன் வளைகுடாவில் பரபர
மும்பை: ஏடன் வளைகுடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி கப்பலுக்குள் கடற்கொள்ளையர்கள் புகுந்த நிலையில், அதிரடியாக சென்ற இந்திய கடற்படை கடற்கொள்ளையர்களை விரட்டி கப்பலை மீட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதல்கள் வணிக கப்பல்களை நோக்கியும் திரும்பியுள்ளன. ஏடன் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதைத் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான மோதலால் செங்கடல் பகுதியில் வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்களும் கப்பல்களை கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரானிய நாட்டை சேர்ந்த மீன்பிடி கப்பல் ஒன்று சோமாலியாவின் கிழக்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த கப்பலுக்குள் கடற்கொள்ளையர்கள் சிலர் புகுந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி, ஈரானிய மீன்பிடி கப்பல் அவசரகாலத்தில் உதவி கேட்டு விடுக்கப்படும் எஸ்ஓஎஸ் அலார்ட் விடுத்தது.
இதற்கு உடனடியாக ரெஸ்பான்ஸ் கொடுத்த இந்திய கடற்படை சுமித்ரா போர்க்கப்பலை அனுப்பி வைத்தது. ஏடன் வளைகுடாவில் சோமாலியாவின் கிழக்கு கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன் படகு கப்பலை நோக்கி சென்ற சுமித்ரா போர்க்கப்பல் உடனடியாக கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்திய கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் கடத்தபட்ட கப்பலும் அதில் இருந்த சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் விவேக் மத்வால் கூறுகையில், " ஏடன் வளைகுடா பகுதியான சோமாலியான் கிழக்கு கடல் பகுதியில் ஐஎன் எஸ் சுமித்ரா போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது ஈரானிய கப்பலில் இருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதோடு, சிப்பந்திகளும் பணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர்.
உடனடியாக ஈரானிய கப்பலை இடைமறித்த இந்திய கடற்படை கப்பல், விதிமுறைகளின் படி கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து ஈரானிய கப்பல் மற்றும் 17 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளனர். கப்பலில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதாகவும் அதன்பிறகு கப்பல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications