மகாராஷ்டிராவில் ரயில் மோதி 11 பயணிகள் பலி! பலர் படுகாயம் என அச்சம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் மோதி 11 பயணிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் மேலும் பல பயணிகள் படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் ரயிலில் பயணித்த பயணிகள், ரயிலில் இருந்து புகை வருவதை பார்த்து அச்சமடைந்துள்ளனர். இதனால் ரயிலை நிறுத்தி தண்டவாளத்தில் இறங்கி, தப்பிக்க முயன்றிருக்கின்றனர். ஆனால் எதிர்புறம் இருந்து வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சுமார் 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விபத்து நடந்த பகுதி ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்ததால் உடனடியாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மீட்பு வாகனங்களால் செல்ல முடியவில்லை. இந்த விபத்து மாலை 4 மணியளவில் நடந்திருக்கிறது. தற்போது விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், உண்மையில் ரயிலில் தீ ஏதும் பற்றவில்லை. சக்கரங்கள் தண்டவாளத்தில் உரசும் போது உராய்வு காரணமாக தீ பற்றியது போன்ற வாடை வீசியிருக்கலாம். எனவே பயணிகள் பயந்து ரயிலை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் விபத்து குறித்து முழு விசாரணை நடந்த பிறகே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.
இந்தியாவில் தொடர்ந்து நடக்கும் ரயில் விபத்துகள், இந்தியன் ரயில்வே மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications