சல்மான்கான், தாவூத் தொடர்பால் பாபா சித்திக் படுகொலை- லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் திகில் பொறுப்பேற்பு!
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு வைத்ததாலேயே தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டார் என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாக மும்பை போலீசார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் பாபா சித்திக்குடன் தங்களுக்கு எந்த வித முன்விரோதமும் இல்லை எனவும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பாபா சித்திக். 3 முறை எம்.எல்.ஏவாக, அமைச்சராக பதவி வகித்த சித்திக் அண்மையில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இணைந்தார். இந்த நிலையில்தான் மும்பையில் நேற்று இரவு பாபா சித்திக் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாபா சித்திக் படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பாபா சித்திக் படுகொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்ஸ்டார் கும்பல் பொறுப்பேற்றிருப்பதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன், பாலிவுட் நடிகர் சல்மான்கான், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் குழுவினருடன் பாபா சித்திக் தொடர்பு வைத்திருந்ததாலேயே அவரை சுட்டுக் கொலை செய்ததாகவும் அவருக்கும் தங்களுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை எனவும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தெரிவித்துள்ளது என்கிறது மும்பை போலீஸ்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய், ஹரியானா போலீஸ்காரர் மகன். கேங்ஸ்டர் கோல்டி பிராருடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறை வாழ்க்கையே லாரன்ஸ் பிஷ்னோயை தனி ஒரு தாதாவாக்கிவிட்டது. தங்களது சமூகத்தினர் மானை புனித தெய்வமாக கருதுகிறவர்கள்; ஆகையால் மான் வேட்டையாடிய பாலிவுட் நடிகர் சல்மான் கொல்லப்படுவார் எனவும் லாரன்ஸ் பிஷ்னோய் மிரட்டல் விடுத்திருந்தார்.
தற்போது சல்மான்கானுடன் நட்பாக இருந்தார் என்பதற்காகவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை படுகொலை செய்தோம் என பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல். இதனையடுத்து சல்மான்கான் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் இந்த பகீர் பொறுப்பேற்பு மகாராஷ்டிராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications