எங்களுக்கு 12 சீட் தரனும்.. மகா விகாஸ் அகாடியில் சிபிஎம் போர்க்கொடி- உத்தவ் தாக்கரே, சரத்பவார் ஷாக்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கலகக் குரல் எழுப்பியிருப்பதால் மகா விகாஸ் அகாடி கூட்டணியின் தலைவர்களான உத்தவ் தாக்கரே, சரத்பவார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். லோக்சபா தேர்தலில் ஒரு இடம் கூட ஒதுக்காமல் ஏமாற்றிவிட்டனர்; இந்த முறை அப்படி ஏமாற மாட்டோம் என்பது சிபிஎம் நிலைப்பாடு.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 26-ந் தேதிக்கு முன்பு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் ஆளும் மகா யுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடியில் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் இடம் பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகின்றன. இனிவரும் நாட்களில் தொகுதிப் பங்கீட்டு விவரங்களை இரு கூட்டணி கட்சிகளும் அறிவிக்க உள்ளன.
இந்த நிலையில் மகா விகாஸ் அகாடியில் இடம் பெற்றுள்ள சிபிஎம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருக்கிறது. மேலும் கடந்த லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு சீட் கேட்டு போராடிப் பார்த்தோம். ஆனால் உத்தவ் தாக்கரேவும் சரத்பவாரும் ஒரு சீட்டை கூட தர மறுத்துவிட்டனர். இருந்த போதும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துக்காக நாங்கள் கூட்டணியிலேயே நீடித்து தேர்தல் பிரசாரம் செய்தோம்; இந்த முறை நாங்கள் ஏமாறமாட்டோம். அதனால் 12 தொகுதிகளை இலக்கு வைத்து தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டோம். மகா விகாஸ் அகாடியில்தான் இப்போதும் இருக்கிறோம். எங்களுக்கு 12 இடங்களை ஒதுக்கியாக வேண்டும் என்கிறார் மகாராஷ்டிரா மாநில சிபிஎம் செயலாளர் உதய் நர்கர். சிபிஎம் கட்சியின் இந்த கறார் நிலைப்பாட்டால் உத்தவ் தாக்கரே, சரத்பவார் தரப்பு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications