மகாராஷ்டிராவில் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசிநாள்; கூட்டணிகளில் தொகுதி பங்கீட்டில் இழுபறி
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். ஆனாலும் மகாராஷ்டிராவின் ஆளும் மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிகளில் சில தொகுதிகள் எந்த கட்சிக்கு என்பதை முடிவு செய்யாமல் இழுபறி நீடிக்கிறது. இன்னொரு பக்கம் பாஜகவில் சீட் மறுக்கப்பட்டவர்களுக்கு கூட்டணிக் கட்சியான ஷிண்டே சிவசேனா சீட் வழங்கி வருகிற வினோதமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்.

ஆனால் இதுவரை இல்லாத வகையில் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. மகாராஷ்டிராவின் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் 9 தொகுதிகள் எந்த கட்சிக்கு என்பது முடிவு செய்யப்படாமலேயே இருக்கிறது
பாஜகவைப் பொறுத்தவரை 150 தொகுதிகளில் போட்டியிடும் என கூறப்பட்டது. தற்போது வரை 146 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜக நேற்று வெளியிட்ட 3-வது பட்டியலில் 25 வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உதவியாளரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
4 இடங்களை சிறிய கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. பாஜகவில் சீட் மறுக்கப்பட்ட சிலருக்கு அதன் கூட்டணிக் கட்சியான ஏக்நாத் ஷிண்டே சிவசேனா வாய்ப்பு கொடுத்து வேட்பாளர்களாகவும் அறிவித்துள்ளது வினோதமாகப் பார்க்கப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகன் நிலேஷ் ரானே, மாஜி எம்பி ராஜேந்திர காவித், மாஜி எம்எல்ஏ விலாஸ் தானே ஆகியோர் பாஜகவில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்திருக்கின்றனர்.
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 65 தொகுதிகளில் போட்டியிடும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் ஷிண்டே சிவசேனா மொத்தம் 80 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 2 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 49 தொகுதிகளுக்குதான் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதேபோல மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் 85-85-95 என தொகுதிப் பங்கீடு முடிவடைந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் 16 தொகுதிகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவும் இல்லை. சமாஜ்வாதி கட்சியும் சில தொகுதிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது
காங்கிரஸ் கட்சி மொத்தம் 103 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. உத்தவ் தாக்கரே சிவசேனா 87 தொகுதிகளுக்கும் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 82 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மொத்தம் 288 தொகுதிகளில் 272 தொகுதிகளை இந்த கூட்டணி வேட்பாளர்களை அறிவித்த நிலையில் 16 தொகுதிகள் குறித்து குழப்பம் நிலவுகிறது. மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் இத்தகைய குழப்பங்கள் இதற்கு முன்னர் இருந்தது இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications