சரியாக படித்து பாருங்கள்.. முதல்வர் ஸ்டாலினுக்கு மகாராஷ்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி
மும்பை: மகாராஷ்டிரா அரசு தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக கற்பிக்க எதிர்ப்பு எழுந்த நிலையில், ஹிந்தி கட்டாயம் இல்லை என தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்தார். இதனை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கையின் (#NEP) கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என கேட்டார். இதற்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசு தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக கற்பிக்க எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து மொழி பிரச்சினை தொடர்பாக புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்தியை திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சொல்வது தவறு. மகாராஷ்டிராவில் மராத்தி மொழியே கட்டாயமாக இருக்கும். மராத்திக்கு பதிலாக இந்தி கட்டாயம் ஆக்கப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்வி கொள்கை 3 மொழிகளைக் கற்க வாய்ப்பளித்துள்ளது.

3 மொழிகளில் 2 இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது. மராத்தி ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், மலையாளம் அல்லது குஜராத்தி தவிர வேறு எந்த மொழியையும் நீங்கள் எடுக்க முடியாது. தற்போது இந்தி மொழிக்கு ஆசிரியர்கள் உள்ளனர். பிற மொழிகளுக்கு ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. ஒரு விஷயம் மட்டும் ஆச்சரியம் அளிக்கிறது. இந்தி போன்ற இந்திய மொழிகளை நாம் எதிர்க்கிறோம், ஆனால் நாம் ஆங்கிலத்தை பாராட்டுகிறோம். ஆங்கிலம் தங்களுக்கு நெருக்கமாக இருப்பதாகவும், இந்திய மொழிகள் தொலைவில் இருப்பதாகவும் பலர் ஏன் நினைக்கிறார்கள்?. இதைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தேவேந்திர பட்னாவிஸின் இந்த கருத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறுகையில், மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாய மூன்றாவது மொழியாகத் திணித்ததற்காக கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி எனக் கூறி இருக்கிறார் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிப்பதற்கு எதிராக, மிகப் பரவலாக மக்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்ததன் விளைவாக உருவான நடுக்கத்தின் வெளிப்பாடுதான் அவரது இந்தப் பேட்டி.
இந்த நிலையில், பிரதமரும், மத்திய கல்வி அமைச்சரும் பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்திட வேண்டும்: தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிரா மராத்தியைத் தவிர வேறு எந்த மூன்றாவது மொழியும் கட்டாயமல்ல எனும் பட்னாவிசின் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறதா?
எனில், தேசிய கல்விக் கொள்கையின்படி மூன்றாவது மொழியைப் பயிற்றுவிப்பது கட்டாயமல்ல என்று தெளிவான வழிகாட்டுதலை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குமா?. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்திற்காக அநியாயமாக தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைத்திருக்கும் ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த பதிவினை டேக் செய்து பதில் அளித்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் ஸ்டாலின் அவர்களே, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து விளக்கங்களைப் பெறுவதற்கு முன், தேசிய கல்விக் கொள்கையைப் பற்றிய ஆழமான புரிதல் உங்களுக்குத் தேவையாகும். முதலில் நீங்கள் தேசிய கல்விக் கொள்கை என்றால் என்ன என்பதை சரியாகப் படிக்க வேண்டும்! உங்கள் குறிப்புக்கான இணைப்பு இங்கே - https://education.gov.in/national-education-policy இணைத்துள்ளேன்.
தேசிய கல்விக் கொள்கையில் மொழித் தேர்வு குறித்து ஒருபோதும் வலியுறுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ இல்லை, ஆனால் 3 மொழிகளில் ஆங்கிலம் தவிர வேறு 2 இந்திய மொழிகளை மட்டுமே படிக்கச் சொல்கிறது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் அல்லது மாணவர்கள் விரும்பும் எந்த மொழியையும் மூன்றாவது மொழியாகப் படிக்க நாங்கள் திறந்திருக்கிறோம். முக்கிய கேள்வி என்னவென்றால், நீங்கள் ஏன் பன்மொழிப் புலமைக்கு ஆளாகவில்லை, யாராவது இந்தியில் படிக்க விரும்பினால் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?" இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications