நூலிழையில் தப்பிய ஆதித்யா தாக்கரே.. வோர்லி தொகுதியில் வெற்றி! ஆனால் கடைசி வரை பயம் காட்டிய சிவசேனா
மும்பை: சிவேசனா கட்சியின் எதிர்கால தலைவராகப் பார்க்கப்படும் ஆதித்யா தாக்ரே இந்த முறை மகாராஷ்டிராவில் மீண்டும் வோர்லி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவருக்கு எதிராக ஷிண்டே சிவசேனா சார்பில் வேட்பாளர் களமிறக்கப்பட்டார். அந்த தொகுதியில் கடும் போட்டி நிலவிய நிலையில், வெறும் 8800 வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்யா தாக்ரே வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு ஒரே கட்டமாகக் கடந்த நவ. 20ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த முறை மக்கள் ஆர்வமாக வாக்களித்த நிலையில், சுமார் 65% வாக்குகள் அங்குப் பதிவானது.

அங்கு 145 தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். ஆளும் தரப்பு சார்பில் பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி களத்தில் இருந்தது. எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி போட்டியிட்டது.
நட்சத்திர தொகுதி: இந்த மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பல நட்சத்திரங்கள் களமிறங்கினர். அதில் முக்கியமானது வோர்லி சட்டசபை தொகுதி. ஏனென்றால் இங்கு தான் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்கரே போட்டியிட்டார்
கடும் போட்டி: இந்த தொகுதியைப் பொறுத்தவரை இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. ஷிண்டே சிவசேனா சார்பில் ராஜ்யசபா எம்பி மிலிந்த் தியோரா, தாக்ரே சிவசேனா சார்பில் ஆதித்யா தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சார்பில் வேட்பாளர் சந்தீப் தேஷ்பாண்டே ஆகியோருக்கு இங்கு போட்டியிட்டனர். இவர்களுக்கு இடையே தான் பிரதான போட்டி என்றாலும் பிஎஸ்பி, ஆர்பிஎஸ், சுயேச்சைகள் உட்படப் பலரும் களத்தில் இருந்தனர். போட்டி கடுமையாக இருந்தால் சிறு கட்சிகள் பெற்ற வாக்குகள் முக்கியமானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 2019 மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை அப்போது ஒருங்கிணைந்த சிவசேனா சார்பில் ஆதித்யா தாக்கரே போட்டியிட்டார். அதுதான் ஆதித்யா தாக்கரேவின் முதல் தேர்தல். பாஜக- சிவசேனா கூட்டணி அமைத்துத் தேர்தலில் அப்போது போட்டியிட்ட நிலையில், வென்றால் ஆதித்யா தாக்ரே முதல்வர் என்றெல்லாம் கூட அப்போது சொல்லப்பட்டது. இதனால் அவருக்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது.
கடந்த தேர்தல்: அந்தத் தேர்தலில் ஆதித்யா தாக்ரே சுமார் 69.14 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு சுமார் 89 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிராக ஒருங்கிணைந்த என்சிபி சார்பில் சுரேஷ் போட்டியிட்ட நிலையில், அவர் 21 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன் மூலம் சுமார் 67 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஆதித்யா தாக்ரே வென்றார்.
வாக்கு வித்தியாசம் ரொம்பவே கம்மி: கடந்த முறை 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ஆதித்யா தாக்கரே இந்த முறை வெறும் 8801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். ஆதித்யா தாக்கரேவுக்கு மொத்தம் 63,324 வாக்குகள் கிடைத்துள்ளன. மறுபுறம் சிவசேனா சார்பில் போட்டியிட்ட மிலிந்த் தியோரா 54,523 வாக்குகளைப் பெற்றார். மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய சந்தீப் தேஷ்பாண்டே 19367 வாக்குகளைப் பெற்றார்.












Click it and Unblock the Notifications