விரலில் மாயமான அழியா மை.. மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் ஓட்டு திருட்டு? ராகுல் காந்தி ‛அட்டாக்'
மும்பை: மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் ஓட்டுப்போட்டவர்களின் கைகளில் வைத்த அழியா மை அழிந்ததாக நேற்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ‛‛தேர்தல் ஆணையம் மக்களை தவறாக வழிநடத்துகிறது. இதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்ததற்கு காரணம். வாக்கு திருட்டு ஒரு தேசவிரோத செயல்'' என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, புனே உள்பட 27 மாநகராட்சிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா(உத்தவ் அணி), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) அணி தோல்வியை சந்தித்துள்ளன.

முன்னதாக நேற்றைய ஓட்டு பதிவின்போது மகாராஷ்டிராவில் பல்வேறு மாநகராட்சிகளில் ஓட்டுப்போட்ட மக்களின் கைவிரல்களில் வைக்கப்பட்ட அடையாள மை அழிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் அணி, ராஜ்தாக்கேரவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் புகார் தெரிவித்தனர். மேலும் அதற்கான வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
மேலும், மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரி தினேஷ் வாக்மரே, ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மரே விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர், ‛‛ தற்போதைய விவகாரம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. மையின் தரம் மட்டுமின்றி, இணையதளத்தில் பரவும் வீடியோ குறித்தும் விசாரணை நடத்த உள்ளோம்.
மேலும் வாக்களிக்கும்போது விரலில் மை பூசப்பட்டதா அல்லது ஏதேனும் தவறான நோக்கத்துடன் பூசப்பட்டதா என்பதை உறுதி
செய்வதற்காகவே வீடியோக்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் இன்று பயன்படுத்தப்பட்ட மார்க்கர் பேனாக்களின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உள்ளோம். மையின் தரத்திற்கான சூத்திரம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனியார் நிறுவனம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு அந்த பேனாக்களை வழங்கியது. 2011 முதல் அனைத்து உள்ளாட்சி தேர்தல்களுக்கும் நாங்கள் இந்த பேனாக்களை பயன்படுத்தி வருகிறோம்.
இந்த சர்ச்சை காரணமாக, வரவிருக்கும் மாவட்ட ஊராட்சி தேர்தல்களில் மார்க்கர் பேனாக்களை பயன்படுத்த போவதில்லை. அதற்கு பதிலாக சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பயன்படுத்தப்படும் தேர்தலுக்கான பாரம்பரிய மையை (கர்நாடக அரசின் நிறுவனமான மைசூர்பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் தயாரிப்பு) மீண்டும் பயன்படுத்தப்படும்'' என்று கூறினார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான போட்டோவை காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து, ‛‛தேர்தல் ஆணையம் மக்களை தவறாக வழிநடத்துகிறது. இதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்ததற்கு காரணம். வாக்கு திருட்டு ஒரு தேசவிரோத செயல்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications