அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமில்லாத உணவு.. கோபத்தில் கான்டிராக்டரை அறைந்த அமைச்சர்!
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமில்லாத உணவு வழங்கியதால் உணவு கான்டிராக்டரை அமைச்சர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தரமில்லாத உணவு வழங்கப்பட்டது தொடர்பாக மாவட்ட துணைப்பிரிவு அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவை ஆட்டி படைக்கும் கொரோனா
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோன தொற்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் தினமும் 50,000- க்கு மேல் பாதிப்பு பதிவாகி வருகிறது. தினமும் 250-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி உள்ளன.

மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
அரசு மருத்துவமனைகளில் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் அங்கு தொற்று பாதித்தவர்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பச்சு காடு, அகோலாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நோயாளிகளுக்கு தரமில்லாத உணவு
அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அந்த உணவின் தரம் குறைந்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனையின் உணவு கான்டிராக்டரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டார் அமைச்சர். அப்போது உணவின் தரம் மற்றும் அங்குள்ள நடவடிக்கை குறித்து கான்டிராக்டர் சரியான விளக்கம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கான்டிராக்டரை அறைந்த அமைச்சர்
அவர் கொடுத்த விளக்கத்தில் திருப்தி அடையாததால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் திடீரென கான்டிராக்டரை அறைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த மருத்துவமனையில் தரமில்லாத உணவு வழங்கப்படுவது குறித்து உள்ளூர் ஊடகங்களிலும் செய்திகள் ஒளிபரப்பாகின. பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் பச்சு காடு கூறுகையில், ' மருத்துவமனையில் நோயாளிக்கு தரமான உணவு வழங்காதது மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பான பதிவுகளை பராமரிக்காதது குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட துணைப்பிரிவு அதிகாரியிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்' என்று கூறினார்.