Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மராத்தி VS குஜராத்தி.. எங்கு பார்த்தாலும் மோடி.. சோறு குழம்புதான் கிடைக்கல! "ஒன்இந்தியா" மும்பை டைரி

Subscribe to Oneindia Tamil

மும்பை: அரசியலில் அனல் அடித்துக்கொண்டிருந்தாலும், வழக்கத்தை விட வெயில் குறைவாக, இதமான தட்பவெப்பத்துடன் உள்ளது மும்பை. காலை தினசரி பத்திரிக்கைகளில் பெரும்பாலும் முதல்பக்கத்தை நிரப்புவது பாஜக தலைமையிலான ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அடங்கிய மகாயுதி கூட்டணியின் விளம்பரங்கள்தான். அதிலும், பிரதமர் மோடியின் புகைப்படம்தான் அனைத்து தலைவர்களை விடவும் பெரிதாக வரும்படி விளம்பரங்கள் காட்சியளிக்கின்றன.

ஆம்.. மகாராஷ்டிரா தேர்தல் களத்தை கவனிப்பதற்காக மும்பை சென்றுள்ள "ஒன்இந்தியாதமிழ்" குழுவின் அனுபவங்களைதான், உங்கள் முன்பாக, ஒரு பயண டைரியாக, காட்சிப் பெட்டகமாக, விரித்து வைக்கிறோம்.

maharashtra assembly election 2024 oneindia tamil

"இங்கு Beef கறி பரிமாறப்படுவதில்லை.." என்ற வாசகங்கள் மும்பையின் பல ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் இடம் பெற்றுள்ளது நம்மூரிலிருந்து செல்வோருக்கு கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறது. ஆனால் பெரும்பாலான ஹோட்டல்களில், இட்லி, தோசை, சோறு உட்பட சாம்பாரோ அல்லது குழம்பு ஊற்றி சாப்பிடும் ஐட்டங்கள் கிடைப்பதில்லை.. கிடைத்தாலும் அதை சாம்பார் என்று சொல்லிவிட முடியாது. நம்மூர் சுவைக்கு ரொம்ப தூரம். மெனு கார்டுகளில் கோதுமை ஐட்டங்களும், ஃப்ரைடு ரைசுகளும், பிரியாணிகளும், சான்ட்விட்ச்களும்தான் அதிகம் உள்ளன என்பது மும்பை அப்படியேத்தான் இருக்கிறது என்பதையும் நினைவூட்டுகிறது.

maharashtra assembly election 2024 oneindia tamil

விமான நிலையம்: அதானி நிர்வகிக்கும், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தின், பயணிகள் காத்திருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து டிவிகளிலும் பெரும்பாலும் ஒரே ஒரு செய்தி சேனல்தான் காட்டப்படுகிறது. அதில் பெரும்பாலும் மோடி அல்லது அமித் ஷா, ஆவேசமாக காங்கிரசை திட்டி தேர்தல் உரை நிகழ்த்தும் காட்சிகள்தான் காட்சியளிக்கின்றன.

mumbai maharashtra assembly election 2024 oneindia tamil

டிஜிட்டல் விளம்பரங்கள்: மும்பையின் பிரதான சாலைகள் பிரமாண்டமானவை. ஆஹா, நம்மூர் மாதிரி இல்லாமல், இங்கே சாலைகள் அகலமாகவும், பாலங்கள் நீளமாகவும் அமைக்கப்பட்டுள்ளதே என்ற ஆர்வத்தோடு, ஏசி காரின் கண்ணாடியை கூட இறக்கிவிட்டு உற்று பார்க்க நினைத்தோம். ஆனால், நமது கவனத்தை சிதறடிக்கும் வகையில், சாலையின் இரு மடங்கிலும் மோடி, ஏக்நாத் ஷிண்டே படங்கள் அடங்கிய டிஜிட்டல் விளம்பர போர்டுகளும், பேனர்களுமாக தென்படுகின்றன. அரிதாகத்தான், காங்கிரஸ் கூட்டணியின், உத்தவ் தாக்ரே உள்ளிட்டோர் அடங்கிய போஸ்டர்கள் தென்பட்டன.

சோனி லைவ், ஜி5 போன்ற ஓடிடி தளங்களின் புது வரவு தொடர்பான டிஜிட்டல் விளம்பரங்களோடு ஒப்பிட்டால் கூட, காங்கிரஸ் கூட்டணியின் விளம்பரங்கள் குறைவுதான்.

சொல்ல மறந்துவிட்டோம்.. இங்கு ஓலா உட்பட ஆப் மூலம் புக் செய்யும் ஏசி வாகனங்களில் நீங்கள் வற்புறுத்தி கேட்காமல் ஏசி ஆன் செய்தே வைத்துள்ளார்கள். ப்ளஸ்.. கூடுதல் தொகை கேட்டு நச்சரிக்காமல் வாடிக்கையாளர்களை விருந்தினர்கள் மாதிரி கவனிக்கிறார்கள். வந்திருப்பது வெளி மாநில வாடிக்கையாளர் என்று தெரிந்தாலும் கூட.

mumbai maharashtra assembly election 2024 oneindia tamil

பரந்த மனதுடன் மும்பை: தமிழரோ, கன்னடரோ, மலையாளியோ, தெலுங்கரோ, வெளிநாட்டவரோ, மும்பை அனைவரையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறது. காஸ்மோபாலிட்டன் சிட்டி என்ற பெயர் மும்பைக்கு மிக பொருத்தம்தான். மராத்தியில் பேசு அல்லது ஹிந்தியில் பேசு என்று எந்த டிரைவரும், எந்த வியாபாரியும் அல்லது எதிர்படும் யாரும் அங்கு வற்புறுத்துவது இல்லை. அனைவரையும் சமமாக பார்த்து அவரவர் வேலையை சரியாக செய்வதால்தானோ என்னவோ, இந்தியாவின் நிதித் தலைநகரமாக இன்னமும், மும்பை உள்ளது.

"புனே அப்படியில்லை. அங்கு மராத்தி மண்ணின் மைந்தர்கள் என்ற கெத்து உள்ளது.." என்று இரு நகரங்களிலும் வாழும் ஒருவர் நம்மிடம் சொன்னதையும் குறிப்பிட மறக்கவில்லை.

mumbai maharashtra assembly election 2024 oneindia tamil

மராட்டியம் VS குஜராத்: அதேநேரம், மராத்தி VS குஜராத்தி என்ற போட்டி மனப்பான்மை மும்பைவாலாக்களிடம் உள்ளூர ஓடிக்கொண்டிருப்பதை கவனிக்க முடிந்தது. "மோடியும், அமித்ஷாவும், மும்பைக்கு வர வேண்டிய தொழில் நிறுவனங்களை, குஜராத் கொண்டு சென்றுவிடுகிறார்கள் சார்.." என்று மராட்டியத்தை சேர்ந்த கார் டிரைவர் நம்மிடம் புகார் பட்டியல் வாசிக்க, "மும்பைக்காரர்கள் டிராபிக் சிக்னலை மீறுவார்கள் சார்.. காலையிலேயே குட்கா போடுவார்கள் சார்.. ஆனா எங்க ஊர்களில் வெள்ளை கோட்டை தாண்டி ஒரு இஞ்ச் கூட வண்டி போகாது, அவ்வளவு ஓழுங்கானவர்கள்" என்றார் குஜராத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்.

அது சரி.. எல்லா வசதியும் உள்ள குஜராத்தை விட்டுவிட்டு, மும்பைக்கு நீங்கள் ஏன் வந்து தொழில் செய்கிறீர்கள் என்ற நமது கேள்விக்கு மட்டும், சரியான பதிலை அவர் சொல்லவில்லை.

mumbai maharashtra assembly election 2024 oneindia tamil

கார் டிரைவர்: "எனக்கு மகாராஷ்டிர அரசியல்வாதிகளிலேயே முன்பு ரொம்ப பிடித்தது பால்தாக்ரே, இப்போது பிடித்தது நிதின் கட்கரி. பால் தாக்ரே விரல் அசைத்தால் பாகிஸ்தான் விமானம் மும்பையில் தரையிறங்காது.." என்று குஜராத்தின் அகமதாபாத்தை பூர்வீகமாக கொண்ட கார் டிரைவர் சந்திரசேகரன் நம்மிடம் சொன்னபோது முகத்தில் அப்படி ஒரு கூஸ்பம்ப் தெரிந்தது. நிதின் கட்கரி மாதிரி, பாலமும், சாலைகளும் யாரும் போட்டது இல்லை. எல்லாம் எங்க ஊர்க்காரர் மோடி அரசாங்கத்தால் வந்தது சார் என்று புன்முறுவலோடு சொல்லி முடித்தார் அவர்.

maharashtra assembly election 2024 oneindia tamil

மும்பையின் நேர்மை: "எந்த ஊர்க்காரர்களாக இருந்தாலும் மும்பையில் செட்டில் ஆகிவிட்டால், வேறு ஊருக்கு போக மாட்டார்கள். ஏன்னா இங்கு எல்லாமே பக்கத்தில் கிடைக்கும். இங்கு வியாபாரிகளும் நியாயமானவர்கள். சென்னையில் 10 கிராம் அதிகமாக போனால் கூட டிஜிட்டல் எடை மெஷின் சொல்லும் பணத்தை வசூலிப்பார்கள். காஸ்மோபாலிட்டன் சிட்டியான, மும்பையில் சாலையோர கடைகளில் இன்னும் எடை பார்க்கும் கல் வைத்துதான் எடை போடுகிறார்கள். சரியான எடையோடும் இருக்கும், கொஞ்சம் கூடுதலாக முள் சாய்ந்தாலும், அதே விலைக்கே தருவார்கள். குறிப்பாக டாக்சிகளில், மீட்டரை போட்டுதான் ஓட்டுவார்கள்" என்று பூரிப்போடு சொன்னார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சாமுவேல்.

எடை மிஷின் மட்டுமல்ல, சிட்டி பஸ்கள் கூட 90களில் பார்த்த மாதிரியே உள்ளன. ஆட்டோ மற்றும் டாக்சி கார்களும் கறுப்பு, மஞ்சள் வண்ணத்தோடு தங்கள் வின்டேஜ் ஃபீலிங்கை அப்படியே வைத்துள்ளன.

mumbai maharashtra assembly election 2024 oneindia tamil

அரசியல் கிளைமேட்: மும்பையின் அரசியல் விவாதங்கள் வளர்ச்சி சார்ந்ததாக உள்ளன. மதம் சார்ந்ததாக இல்லை. மும்பையில் எங்கள் கூட்டணி அரசில்தான் சூப்பரான புதிய சாலைகள் போடப்பட்டன என்று பாஜக ஆதரவாளர்கள் நெஞ்சை நிமிர்த்தினால், பணக்காரர்களுக்கான கடல் வழிச் சாலையை போட்டுவிட்டு, மும்பை சிட்டிக்குள் மக்கள் வாழும் பகுதிகளில் சாலைக்கு தார் போட்டு பல வருஷமாகிறது என்பது காங்கிரஸ் ஆதரவாளர்கள் கருத்தாக இருந்தது.

காங்கிரஸ் கூட்டணி அரசு வந்தால் மகளிர் உதவித் தொகை ரூ.3000 என்று வாக்குறுதி அளித்துள்ளதால் அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்புவதாக ஆயீதா என்ற இல்லத்தரசி நம்மிடம் கூற, பாஜக கூட்டணி தரும் 1500 திட்டத்தை காப்பியடித்துள்ளது காங்கிரஸ், அக்கறை இருந்தால் முதலிலேயே தந்திருக்க வேண்டும் என்று சொன்னார் கல்லூரி மாணவி, சிந்து.

mumbai maharashtra assembly election 2024 oneindia tamil
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+