மும்பை புறநகர் ரயிலிலிருந்து பயணிகள் தவறி விழுந்து விபத்து.. 5 பேர் பலி! 10க்கும் அதிகமானோர் காயம்
மும்பை: மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸிலிருந்து, தானேவின் கசாரா நோக்கி சென்றுக் கொண்டிருந்த புறநகர் ரயில் விபத்தில் சிக்கியிருக்கிறது. ரயிலிலிருந்து பயணிகள் கீழே தவறி விழுந்துள்ளனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் கீழே விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மொத்தம் 10-12 பேர் வரை கீழே விழுந்திருப்பதாகவும், காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து நடந்த இடத்தில் ரயில்வே போலீசார் மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விபத்து காலை 9.30 மணியளவில் நடந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. மும்பை புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் காயமடைவது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரும் ஏராளமான விபத்துக்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டது இல்லை.
எனவே, இனி அடுத்து புதியதாக தயாரிக்கப்படும் புறநகர் ரயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகள் இருக்கும் என்று ரயில்வே அறிவித்திருக்கிறது.
சமீப காலமாக நாடு முழுவதும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு ரயில் விபத்தில் சிக்குகிறது. ஆனால் அனைத்து விபத்துகளிலும் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை. இருப்பினும் விபத்துகளால் ரயில் பயணங்கள் தாமதமாகி வருகின்றன. இதற்கு ரயில் தண்டவாளங்கள் முறையாக பராமரிக்காததும், போதுமான அளவில் ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்படாததும்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல மும்பை விபத்தை பொறுத்தவரை, கூடுதலாக புறநகர் ரயில்கள் போதிய அளவில் இயக்கப்படாதது பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனையை இன்னும் ஆராய்ந்து பார்த்தால், இதற்கான காரணம் ஒரே இடத்தில் நகரமயமாக்கல் அதிகரிக்கப்பட்டதுதான் என்றும் சொல்லலாம்.
வேலை வாய்ப்பை மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வளர்த்தெடுக்காமல், ஒரே இடத்தில் குவித்து வைத்திருப்பதால் மக்கள் கூட்டம், கூட்டமாக அந்த இடத்தில் குவிகின்றனர். ஒவ்வொரு நாளும் மும்பை புறநகர் ரயில்களில் சுமார் 75 லட்சம் பேர் பயணிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை கூட குறைய இருந்தாலும், எப்படி இருந்தாலும் பயணிகள் எண்ணிக்கை 50 லட்சத்திற்கு கீழ் குறைவதில்லை. இவ்வளவுக்கும் காரணம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட வளர்ச்சிதான். இதெல்லாம் சரி செய்யப்படும்போதுதான் விபத்துக்கள் தடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications