சல்மான் கான் உயிருக்கு ரூ.5 கோடி பேரம்.. மும்பை போலீசுக்கு பறந்த மெசேஜ்!
மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சல்மான் கான் உயிருக்கு ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டிருக்கிறது. இது குறித்து மும்பை போக்குவரத்து காவல் பிரிவுக்கு மர்ம நபர்களால் மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கிறது.
கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பின்போது, அரிய வகை மானை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இதனை குறிப்பிட்டு, அவர் பிஷ்னோய் இன மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். சல்மான் கான் செய்த குற்றத்திற்காக அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று, மாஃபியா கும்பல் தலைவனான லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பையடுத்து, சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. அவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான பாபா சித்திக் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவரை கொன்றது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்தான் என்று சொல்லப்படுகிறது. தற்போது லாரன்ஸ் குஜராத் சிறையில் இருந்தாலும், அங்கிருந்தவாரே அவரது ஆட்களை கொண்டு பல்வேறு குற்ற செயல்களை செய்து வருகிறார்.
இப்படி இருக்கையில் சல்மான் கானுக்கு இவர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளார். இதனால் சல்மான் கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இந்த அச்சுறுத்தலால் படப்பிடிப்புகளில் நிம்மதியாக பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் எனில் ரூ.5 கோடி வேண்டும் என்று மர்ம நபர்கள், மும்பை டிராபிக் போலீசுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மெசேஜில், "லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வந்து, சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் எனில், ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். கொடுக்க தவறினால், பாபா சித்திக்கை விட சல்மான் கானின் நிலை மோசமடைந்துவிடும். இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மும்பை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக, மான் வேட்டை குறித்து சல்மான் கான் மன்னிப்பு கோரினால் அவரை மன்னிப்பது குறித்து பரிசீலிப்பதாக பிஷ்னோய் சமூக மக்கள் கூறியிருந்தனர். ஆனால் மன்னிப்பு கேட்பது குறித்து சல்மான் கான் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இப்படி இருக்கையில் அவரது உயிருக்கு ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications