உல்லாச கப்பலில் போதை பார்ட்டி.. மேலும் 4 பேர் கைது.. அதிரடி காட்டும் போதை தடுப்பு பிரிவினர்
மும்பை: உல்லாச கப்பலில் போதைப் பொருட்களுடன் நடந்த ரேவ் பார்ட்டி தொடர்பான விவகாரத்தில் டெல்லியைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்தை (event management firm) சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உல்லாசக் கப்பலான 'எம்பிரஸ்' மும்பையில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளுடன், 3 நாள் பயணத்தைத் தொடங்கியது. இக்கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்பிரஸ் உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாகப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் உட்படச் சிலர் அந்தக் கப்பலில் ஏறினர்.

உல்லாச கப்பல்
கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைப் பார்த்து போதைப் பொருள் போலீசார் அதிர்ந்தனர். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள், சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களும் அங்கிருந்து உள்ளனர்.

டெல்லி நிறுவனம்
டெல்லியைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான நமஸ்க்ரே என்ற நிறுவனம் ஒன்றுடன் 'ஃபேஷன் டிவி இந்தியா' இணைந்து கிரே ஆர்க் என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியைச் சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மேர்சன்ட் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்யன் கானுக்கு காவல்
அக்டோபர் 7ஆம் தேதி வரை அவர்கள் போதை தடுப்புப் பிரிவின் காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றே அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நால்வரில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்களான சமீர் சேகல், கோபால்ஜி ஆனந்த் ஆகியோரும் அடங்குவர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

போதைப் பொருள் தடுப்பு பிரிவினர்
மீதமுள்ள இருவர் மனவ் சிங்கல், பாஸ்கர் அரோரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த நமஸ்க்ரே நிறுவனத்தின் நிர்வாகிகளும் தற்போது போதை தடுப்புப் பிரிவின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகி இருந்தது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற பார்ட்டியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்த ஏற்பாட்டாளர்கள் பலருக்கு நேரில் ஆஜராகும்படி போதைத் தடுப்பு பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நமஸ்க்ரே நிறுவனம்
நமஸ்க்ரே என்ற நிறுவனம் கேனப்லஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் எனப் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 30 அக்டோபர் 2020 இல் தொடங்கப்பட்டது. கோர்டெலியா குரூஸ் என்ற உல்லாச கப்பலில் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவிருந்த நிகழ்வை நிர்வகிக்கும் பொறுப்பு இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்களுக்குப் போதைப் பொருள் எடுத்து வருவது குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்ததா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications