டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நோயல் டாடா.. யார் இவர்? பின்னணி
மும்பை: ரத்தன் டாடா மறைவையடுத்து டாடா குழுமங்களின் புதிய தலைவராக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் ஏற்பட்ட நிலையில், அடுத்த தலைவராக நோயல் டாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? இவரது பின்னணி என்பதை இங்கு பார்க்கலாம்.
டாடா குழுமங்களின் தலைவரான ரத்தன் டாடா நேற்று முன்தினம் காலமானார். அரசு மரியாதையுடன் நேற்று மகாராஷ்டிராவில் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செயப்பட்டது. ரத்தன் டாடா மறைவையடுத்து, 30 லட்சம் மதிப்பு கொண்ட டாடா குழுமங்களின் தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், டாடா டிரஸ்ட் குழுமத்தின் புதிய தலைவராக நோயல் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரத்தன் டாடாவின் ஒன்று விட்ட சகோதரர் ஆன நோயல் டாடாவை டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக தேர்வு செய்ய மும்பையில் இன்று போர்டு மீட்டிங் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நோயல் டாடாவுக்கு அறக்கட்டளை உறுப்பினர்கள் 13 பேரும் ஏகமனதாக ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக இருக்கும் நோயல் டாடா யார் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
டாடா ஸ்டீல் மற்றும் டைடன் வாட்ச் நிறுவனத்தில் துணை தலைவராக தற்போது நோயல் டாடா உள்ளார். அவரது தாயார் சிமோன் டாடா. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கத்தோலிக்க பெண்ணான இவர் தான் ரத்தன் டாடாவின் சித்தி ஆவார். தற்போது டிரெண்ட், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்பரேஷன் மற்றும் டாடா இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் தலைவராக நோயல் டாடா உள்ளார்.
நோயல் டாடா கடந்த 1999 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்தார். 67 வயதான நோயல் டாடா சர்வதேச நிறுவனத்தில் தனது பணியை தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு டிரண்ட் நிறுவனத்தின் மேனஜிங் டைரக்டராக பொறுப்பேற்றார். நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக இவர் மாற்றினார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குங்கள் டாடா அறக்கட்டளையிடம் உள்ளது. இந்த பங்குகளை வைத்துதான் அறக்கட்டளை செயல்பாடுகள் நடக்கின்றன. சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை, சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகிய இரண்டு அறக்கட்டளைகளின் தலைவராக நோயல் டாடா ஏற்கனவே உள்ளார். இந்த இரண்டு அறக்கட்டளைகளும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 52 சதவிகித பங்குகளை வைத்துள்ளது.
நோயல் டாடா அயர்லாந்து குடியுரிமை பெற்றவர் ஆவார். மேலும் இங்கிலாந்தில் உள்ள சஸ்ஸெஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச எக்ஸிகியூட்டிவ் புரோகிராம் (IEP) பட்டம் முடித்ததுள்ளார். ஆலு மிஸ்த்ரி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். லியா, மாயா என்ற மகள்களும் நெவில்லே என்ற மகனும் உள்ளனர்.
இதில், லியா டாடா குழுமத்தின் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனியின் துணைத்தலைவராக உள்ளார். மாயா டாடா கேபிடல் நிறுவனத்தில் தனது பணியை தொடங்கி படிப்படியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு வந்து கொண்டிருக்கிறார். நெவில்லே டாடா டிரெண்ட் நிறுவனத்தில் தனது கேரியரை தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications