மறுபடியும் மொதல்ல இருந்தா? மும்பையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா! உஷார் நிலையில் மருத்துவமனைகள்!
மும்பை : மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்றைய பாதிப்பு விகிதம் 8.4% ஆகவும், 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா சரிவில் இருந்து கொரோனா 3வது அலையில் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் மும்பை போன்ற நகரங்களில் சிறிது சிறிதாக பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் வர்த்தக தலைநகராகக கருதப்படும் மும்பையில் நேற்று ஒரே நாளில் 506 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்தது.

கொரோனா பாதிப்பு
இந்நிலையில் இன்று மேலும் 739 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பாதிப்பு சதவீதம் 8.4% ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மும்பையின் கொரோனா பாசிட்டிவிட்டி விகிதம் நேற்று எண்ணிக்கையான 6 சதவீதத்தில் இருந்து 8.40 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு அதிகரிப்பு
இந்நகரில் இன்று 739 புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இது இந்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மும்பையில் 803 வழக்குகள் பதிவானதற்கு பிறகு மிக அதிகமாகும். திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மும்பையின் சுகாதார அதிகாரிகள் போர்கால அடிப்படையில் பரிசோதனையை உடனடியாக அதிகரிக்குமாறு கூறியுள்ளனர். மும்பையில் தினசரி புதிய வழக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளன, பருவமழை அதிகமாக இருப்பதால், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

திடீர் எச்சரிக்கை
12 முதல் 18 வயதுக்குடையோருக்கான தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்கள் அளிப்பதை தீவிரப்படுத்த வேண்டும் என மருத்துவநிபுணர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் போதுமான பணியாளர்கள் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை ஆய்வகங்களில் முழு பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்
இதேபோல், அரசு மருத்துவமனைகளையும் போதுமான பணியாளர்களுடன் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், மும்பை புறநகரில் உள்ள மாலட் பகுதியில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஜம்போ மருத்துவமனை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications